/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2117.jpg)
முன்னாள் சட்டத்துறை அமைச்சர்ரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகத்தில் செயற்கையாக மின்தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி மாறிய மூன்று மாத காலத்தில் இந்தியாவிலேயே முதன்மையான முதல்வர் சிறந்த முதல்வர் என தன்னைத்தானே கூறும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் ஆட்சியில் ஏன் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் தொடர்ச்சியாக எங்கள் கட்சி ஆட்சி நடந்த போது அதே கட்டமைப்பு அளவு உற்பத்தி தான் தொடர்ந்தது. அப்போது மின்வெட்டு ஏற்படவில்லை; தற்போது மின்வெட்டு ஏற்பட்டதற்கு என்ன காரணம். இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட மின்வெட்டு. திமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு என்ற பெயரில் தனியாரிடம் அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கி வெளி நாடுகளிலிருந்தும், தரமற்ற நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கி அதன்மூலம் சம்பாதிப்பதற்காக மின்வெட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.
தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. சமூக நீதி குறித்து பேசும் முதல்வர் ஸ்டாலின் அதை பின்பற்றவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். இந்தியாவில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் மாநிலம் தமிழகம். இங்கு 74 சதவீத மக்கள் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மக்கள் 18 சதவீதம், பழங்குடியின மக்கள் ஒரு சதவீதம் வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு மொத்தம் 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவர்கள் 22 சதவீதத்திற்கு மேல் உள்ளனர். அதனால், சாதிவாரியாக கணக்கெடுத்து அந்த அளவிற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இதையெல்லாம் கேட்க வேண்டிய திருமாவளவன், சமூக நீதி குறித்து பேசுபவர் ஏன் மௌனமாக இருக்கிறார். உடனடியாக இந்த அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். அப்படி நடத்தினால்தான், தமிழகத்தில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தவிர்த்து 69 சதவீத இட ஒதுக்கீட்டையும் காப்பாற்றமுடியும். பெயரளவில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார் முதல்வர்.
முடக்கப்பட்ட குணசேகரன் ஆணையம் மீண்டும் செயல்பட வேண்டும். தற்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் நிதிஷ் குமார் மக்கள் தொகை கணக்கெடுப்பு சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். மகாராஷ்டிராவிலும் அதேபோல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என கூறினார்.
இந்தச் சந்திப்பின்போது, அவருடன் நகரச் செயலாளர் ராமதாஸ், ஒன்றியச் செயலாளர் சுரேஷ்பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)