வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலையில் தொகுதியுள்ளதால் தேர்தலை ரத்து செய்கிறோம் என அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்துவிட்டது ஆணையம். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஏ.சி.சண்முகம், அது தள்ளுபடியானது.
தேர்தல் ரத்தால் திமுக எந்த அளவுக்கு ஏமாற்றத்திலும் வருத்தத்திலும் இருக்கிறதோ அதே அளவு வருத்தத்தில் இருக்கிறார் ஏ.சி.சண்முகம். கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார் ஏ.சி.சண்முகம். அப்போது 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வென்றது அதிமுக. இப்போது அதிமுக-பாஜக கூட்டணி அமைத்திருக்க, அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட்டார் சண்முகம். இரட்டை இலையில் போட்டியிடுவது தனது தாய் வீடுக்குத் திரும்புவது போன்ற உணர்வை அளிக்கிறது என்று நெகிழ்ந்து கூறியிருந்தார். இந்த முறை தான் வெல்வது உறுதி என்ற கணக்கில் இன்னும் உற்சாகமாக தேர்தல் வேலைகள் பார்த்துவந்த ஏ.சி.சண்முகத்துக்கு தேர்தல் ரத்து பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.
இந்நிலையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி நகரத்தில் 200வது வாக்குசாவடியில் தனது குடும்பத்தினரோடு வாக்களிக்க வந்தார் ஏ.சி.சண்முகம். வாக்களித்தவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, "ஆரணியில் ஒரு பள்ளியில் என்னுடைய வாக்கை அளித்தேன். நாடு முழுக்க தேர்தல் நடக்குது, நான் போட்டியிட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்திட்டாங்க" எனச் சொல்லியபடி கண்ணீர்விட்டார். தொடர்ந்து பேச முடியாமல் தடுமாறிய அவர், திரும்பி வீட்டுக்குள் செல்ல முற்பட்டார். வீட்டினுள் செல்லாமல் கதவுக்கு உள்ளே திரும்பி சற்று நேரம் கலங்கி நின்ற அவரை அவரது ஆதரவாளர்கள் தேற்றினர். பிறகு கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் பேசியவர், "மே 19ந்தேதி தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு தர டெல்லி செல்கிறேன்" என்றார்.