Skip to main content

”கூட்டாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்க முயற்சிக்கிறோம்” - ஸ்டாலினுடனான உரையாடல் குறித்து மம்தா!

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

mamata

 

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கும், அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர், மேற்கு வங்க சட்டமன்றம் கூடுவதை நிறுத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்காரணமாக ஆளுநரின் அனுமதியின்றி மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கூட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சட்டமன்றம் கூட வேண்டுமானால் ஆளுநரின் அனுமதியோடு, அவரது உரையோடு மட்டுமே கூட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

 

மேற்கு வங்கத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. ஒருவேளை ஆளுநர் சட்டமன்றத்தைக் கூட்ட அனுமதி மறுத்தால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்படும். இது அரசின் செயல்பாடுகளை பாதிக்கும். மேலும் ஆளுநரின் இந்த உத்தரவு, அரசியலமைப்பு ரீதியிலான நெருக்கடிக்கும் வழி வகுக்கும் என கருதப்படுகிறது.

 

மேற்கு வங்க ஆளுநரோ, மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே சட்டமன்றத்தை முடக்கியதாகக் கூறியுள்ளார். ஆனால் அம்மாநில ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸோ, ஆளுநரின் முடிவை விமர்சித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினையும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும் தொடர்புகொண்ட மம்தா, எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

 

இந்த அழைப்பினை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினும்,  எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறும் என அறிவித்தார். இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, ”நாட்டின் கூட்டாட்சி அமைப்பு தகர்க்கப்பட்டுள்ளது... நாட்டின் அரசியல் சாசனம் நசுக்கப்பட்டு வருகிறது. அதைப் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவிடம் தொலைபேசியில் பேசியது தொடர்பாக பதிலளித்த மம்தா, ”(நாட்டின்) கூட்டாட்சிக் கட்டமைப்பைப் பாதுகாக்க நாங்கள் அனைவரும் இணைந்து முயற்சி செய்கிறோம். அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் எதிர்க்கட்சி முதல்வர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைக்கப்படவில்லை எனவும் மம்தா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், ”காங்கிரஸுடன் எந்தப் பிராந்தியக் கட்சியும் நல்லுறவைப் பகிர்ந்து கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சி அதன் வழியில் செல்லும், நாங்கள் எங்கள் வழியில் செல்வோம்” எனக் கூறியுள்ளார். பாஜகவுக்கு எதிராக மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணையுமாறு காங்கிரஸையும், இடதுசாரிகளையும் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை” எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்