திரவ சோப்பு, எண்ணெய், வெள்ளை பெயிண்ட் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை பயன்படுத்தி பால் தயாரித்து விற்பனை செய்துவந்த 57 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர்-சம்பல் பகுதியில் பல பிரபல நிறுவனங்களின் போலி பாக்கெட்டுகளில் நச்சுத்தன்மை மிக்க செயற்கை பால் விற்பனை செய்யப்பட்டு வந்ததுள்ளது. இதனை கண்டறிந்த அதிகாரிகள் இது குறித்து விசாரணையை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில் அப்பகுதியில் உள்ள 3 இடங்களில் இப்படி ஆபத்தான மூலப்பொருட்களை கொண்டு போலி பால் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டது.
இதனையயடுத்து இது தொடர்பாக 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயற்கைப்பால் மத்திய பிரதேசம் மட்டுமின்றி உத்திர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பால் தயாரிக்கும் இந்த இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது 10,000 லிட்டர் கலப்பட பால், 500 கிலோவுக்கும் மேற்பட்ட கலப்பட பால்கோவா மற்றும் 200 கிலோ கலப்பட பன்னீர் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மூல பொருட்களை கொண்டு பால் தயாரித்து விற்பனை செய்துவந்த சம்பவம் வட மாநிலங்களில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.