Skip to main content

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடும் அதிசயம்... காரணம் என்ன..?

Published on 30/09/2019 | Edited on 30/09/2019

அரசியலில் பல்வேறு சாதனைகள் இந்த 70 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் அரசியல்வாதிகள் படைத்துள்ளனர். அதில் மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது ஜோதிபாசு தொடர்ந்து 5 முறை மேற்கு வந்க முதல்வராக பதவி வகித்தது. அந்த வகையில் 1978 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அவர் கடந்த 2000ம் வரை தொடர்ந்து பதவியில் இருந்தார். அந்த சாதனை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் முறியடிக்கப்படாமலேயே இருந்து வந்தது. அந்த சாதனையை சில ஆண்டுகளுக்கு முன்பு முடியறித்தவர் சிக்கிம் மாநில முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங். சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்து ஜோதிபாசுவின் சாதனையை முறியடித்தவர் பவன் குமார் சாம்லிங். இவரது தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி, 1994ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 19 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து தேர்தல்களில் வென்று 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வந்தார் சாம்லிங். இந்தநிலையில் கடந்த கடந்த சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வியை சந்தித்தது.


மேலும், சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் முதல்வராக பொறுப்பேற்றார். இருந்தபோதிலும் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. 1990-ம் ஆண்டு அவர் அமைச்சராக இருந்தபோது கால்நடைத்துறையில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு ஒன்றில் தமாங்குக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. இதனால் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. 2018 ஆகஸ்ட் 10ம் தேதியில் இருந்து 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. முதல்வராக தற்போது பதவி வகிக்கும் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதையடுத்து தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு மனு ஒன்றை அனுப்பினார். அதில் 1990-ம் ஆண்டு நடந்த ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற தமக்கு 2003-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி 6 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது செல்லாது என அவர் வாதிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் அவருக்கு தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடையை குறைத்து இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் அவர் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் இடைத் தேர்தலில் தமாங்கின் கிரந்திகாரி மோர்ச்சா, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிம் வெள்ளப்பெருக்கு; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

 Sikkim flood Increase in toll

 

சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.

 

சிக்கிம் மாநிலத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி திடீரென நள்ளிரவில் மேக வெடிப்பால் பெய்து தீர்த்த மழையால், அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

 

இதனையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன. இதன் காரணமாக 2500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 1300 வீடுகளும், 13 பாலங்களும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட ராணுவ வீரர்களில் 9 பேரின் உடல்கள் உள்ளிட்ட 32 பேரில் உடல்கள் இன்று ஒரே நாளில் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 56 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

 

 

Next Story

வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பீரங்கி குண்டு; நொடியில் நேர்ந்த சோகம்

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

An instant tragedy by flood in west bengal

 

சிக்கிம் மாநிலம் மங்கன் மாவட்டத்தில் திடீரென நள்ளிரவில் மேக வெடிப்பால் பெய்து தீர்த்த மழையால், அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான முகாம் ஒன்று அடித்து செல்லப்பட்டது. இதில் 22 ராணுவ வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இந்திய ராணுவ வீரர்களின் முகாமில் இருந்த துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களும் தீஸ்தா ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. 

 

இதனிடையே, தீஸ்தா ஆறு, அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் பாயும் நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கிலும், ராணுவ வீரர்களின் ராணுவ உபகரணங்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு கரையில் ஒதுங்கியுள்ளன. 

 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் ஆற்றின் கரையில் ஒதுங்கியுள்ள பீரங்கி குண்டை எடுத்துள்ளார். அந்த பீரங்கி குண்டை இரும்பு பொருள் என நினைத்து அதை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இரும்பு பொருள் என நினைத்து பீரங்கி குண்டை உடைத்து பழைய இரும்பு கடையில் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்று எண்ணியுள்ளார். அதன்படி, அந்த பீரங்கி குண்டை தனது வீட்டில் வைத்து உடைத்துள்ளார். அப்போது, பீரங்கி குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அவரது வீட்டில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

 

இதனிடையே, தீஸ்தா ஆற்றின் கரையின் ஒதுங்கி இருக்கும் எந்த பொருளையும் தொட வேண்டாம் என பொதுமக்களை ஜல்பைகுரி மாவட்ட காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீஸ்தா ஆற்றில் ராணுவ வீரர்களின் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே, அவற்றை தொடாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம். அறிமுகமில்லாத பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.