இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக விரைவில் வளரும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையநாயுடு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் 9 -ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
தலைமை விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, பாரட்டி பேசினார். அவர் பேசும்போது,
"மருத்துவர்கள் நோயாளிகளை மனிதநேயத்துடன் பார்த்து கொள்ள வேண்டும். கடவுளை கூட நம்பாதவர்கள் மருத்துவர்களை நம்புகின்றனர்" என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர், "தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் புரட்சி காரணமாக உலகம் அதிவேகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரா நாடாக இந்தியா மாறிவருகின்றது. விரைவில் உலகின் மிகப்பெரிய 3- ஆவது பொருளாதார நாடாக இந்தியா மாறும்" என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா, " நாட்டில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது. 70 மருத்துவக்கல்லூரிகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மாற்றப்படும், 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையம் துவங்கப்படும்" என்றார்.
இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, ஜிப்மர் தலைவர் மஹாராஜ் கிஷன் பான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.