Skip to main content

கன்னம் குறித்து பா.ஜ.க எம்.பியின் சர்ச்சை கருத்து; கிண்டலாக பதிலளித்த பிரியங்கா காந்தி!

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
Priyanka Gandhi responded sarcastically on BJP MP's Controversial Comment on cheek

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதன்படி, டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி தொகுதியான கல்காஜி சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் எம்.பி ரமேஷ் பிதுரியை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்திருந்தது. 

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.ஜ.க வேட்பாளர் ரமேஷ் பிதுரி சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மாநிலத்தின் சாலைகளை ஹேமமாலினியின் கன்னங்கள் போல் மென்மையாக்குவேன் என்று பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருந்தார். லாலு பொய் சொன்னார், அவர் அதை செய்யவில்லை. ஆனால் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஓக்லா மற்றும் சங்கம் விஹார் சாலைகளை நாங்கள் அமைத்தது போல், கல்காஜியின் அனைத்து சாலைகளையும் பிரியங்கா காந்தியின் கன்னத்தைப் போல மென்மையாக்குவோம்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

பா.ஜ.க தலைவர் ரமேஷ் பிதுரியின் இந்த பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களை தெரிவித்தது. இது ஒருபுறமிருக்க, டெல்லி முதல்வர் அதிஷி தனது துணை பெயரை மாற்றியதையும் அவரது தந்தை தொடர்புப்படுத்தி ரமேஷ் பிதுரி சர்ச்சைக்குரிய வகையில் தாக்கி பேசியிருந்தார்.  ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த டெல்லி முதல்வர் அதிஷி, செய்தியாளர்களைச் சந்தித்து கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

இந்த நிலையில், ரமேஷ் பிதுரியின் பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டு குழு கூட்டத்தில் பிரியங்கா காந்தி நேற்று பங்கேற்றார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ரமேஷ் பிதுரியை கிண்டல் செய்யும் வகையில் பேசினார். இது குறித்து அவர், “ரமேஷ் பிதுரி தனது சொந்த கன்னங்களைப் பற்றி பேசவே இல்லை. அவருடைய கருத்து கேலிக்குரியதாகும். இது போன்ற தேவையில்லாத விஷயங்களுக்கு பதிலாக தேர்தலின் போது டெல்லி மக்களின் முக்கிய பிரச்னைகள் குறித்து நாம் பேச வேண்டும்” என்று பதிலளித்தார்.  

சார்ந்த செய்திகள்