Skip to main content

“தேர்தல் ஆணையம் சிறப்பாக பணியாற்றுகிறது” - பிரதமர் மோடி பாராட்டு!

Published on 07/05/2024 | Edited on 07/05/2024
"Election Commission is working well" - PM Modi!

12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (07.05.2024) மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த 93 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.  குஜராத் மாநிலத்தில்  உள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மராட்டியத்தில் 11 தொகுதிகளிலும்  கோவாவின் 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும் அஸ்ஸாம் - 3, பீகார் - 5, சத்தீஸ்கர் - 7, மத்தியப் பிரதேசம் - 8 (பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளரின் மரணத்தைத் தொடர்ந்து 2 ஆம் கட்டத்திலிருந்து 3 ஆம் கட்டத்துக்கு மாற்றப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதிக்கான தேர்தலும் நடைபெற்று வருகிறது), உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனையொட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ரா வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வருகை புரிந்து வாக்களித்தனர். 

"Election Commission is working well" - PM Modi!

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, “மக்களவைத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இந்த ஜனநாயக திருவிழாவில் வாக்களிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தேர்தல் பிரச்சாரம் நடைபெறும். நான் எப்போதும் குஜராத்தில் வாக்களிப்பேன். மத்திய அமைச்சர் அமித் ஷா இங்கிருந்து பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

நான் ஆந்திராவில் இருந்து நேற்று இங்கு வந்தேன். மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு இன்று செல்ல வேண்டும்.  வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் அனைவரும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேர்தலில் வன்முறை சம்பவங்கள் எங்கும் பதிவாகவில்லை.  தேர்தல் ஆணையம் சிறப்பாக பணியாற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்