Skip to main content

முதலமைச்சர் ரங்கசாமியிடம் மனு அளித்த மக்கள் உரிமை கூட்டமைப்பு!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

People's Rights Federation submits petition to Chief Minister Rangasamy

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமியிடம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் கோ. சுகுமாரன், முதலமைச்சர் ந. ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: “பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கடந்த 2015ஆம் ஆண்டு தாங்கள் முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. 

 

ஆனால், அத்துறையைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, அத்துறைக்கான இயக்குநர் பணியிடம் உருவாக்க அனுமதி வேண்டி மத்திய அரசுக்கு அனுப்பிவைத்த கோப்பிற்கு இதுவரையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு இயக்குநர் உள்ளிட்ட பணியாளர்களை நியமித்து, அத்துறையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். மாநில அளவிலான பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்படாததால் ஆணையத்தின் செயல்பாடுகள் முடங்கிப்போயுள்ளன. எனவே, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை உடனே நியமிக்க வேண்டும்.

 

எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட நிதிகள் முறையாக, ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்குச் செயல்படுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான பின்னடைவுப் பணியிடங்கள் (Backlog) அனைத்தையும் உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் அருந்ததிய இன மக்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டப்படி செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியிலும் அருந்ததிய இன மக்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். பழங்குடியின மலைக்குறவன், காட்டுநாயக்கன், எருகுலா, குருமன்ஸ் ஆகிய சமூகங்களைப் பட்டியலின பழங்குடியினராக அங்கீகரித்து மத்திய அரசு அரசாணை வெளியிட ஆவன செய்ய வேண்டும். 

 

வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் பழங்குடியினர் 23 குடும்பங்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்படும் 2 சதவீத இடஒதுக்கீட்டை 4 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துக்களை மீட்டு அவற்றை முஸ்லிம் மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது

 

 

சார்ந்த செய்திகள்