இன்று உலகளாவிய புலிகள் தினம். பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் புலிகள் இன்றைக்கு அரிய வகை உயிரினமாக மாறி வருகிறது. நிலவியல் கொள்கை மாற்றத்தாலும், மனித ஆக்கிரமிப்புகளால் வனப்பகுதி சுருங்குவதால் புலிகள் நெருக்கடியை எதிர்கொள்வதாக எச்சரிக்கை விடுக்கிறது தேசியப் புலிகள் பாதுகாப்பு நிறுவனம். வாழ்விட இழப்பு, வேட்டையாடுதல் போன்றவை புலிகளின் உயிர்வாழுதலுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருக்கின்றன. இந்தியாவின் தேசிய விலங்காகக் கொண்டாடப்படும் புலிகள் வாழ்வதற்கு நிலமும், வனமுமற்று மனிதர்கள் வாழும் பகுதிகளில் உட்புகும் செய்திகள் பேராபத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஒரு வனத்தில் புலிகள் அதிகம் இருக்கிறதென்றால், அவை வாழ்வதற்கேற்ற நீர், உணவு, பாதுகாப்பான வனம், உலவுவதற்கான பரந்த நிலம் யாவும் கிடைக்கப் பெறுவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. உணவுச் சங்கிலியைக் காப்பாற்றுவதிலும், பல்லுயிர்ப் பெருக்கத்தைத் தக்க வைப்பதிலும் புலிகள் மிக முக்கியக் காரணியாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள வனப்பரப்பில் மொத்தமாக 3,925 புலிகள் உள்ளதாக இந்திய வன உயிரின ஆய்வு மையம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகளும், கர்நாடகாவில் 563, உத்தராகண்ட்டில் 560, மராட்டியத்தில் 444 புலிகள் உள்ளன. தமிழ்நாட்டில் முதுமலை முகாமில் 114 புலிகளும், சத்தியமங்கலத்தில் 85 புலிகளும் உள்ளதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 51 வன உயிர்க் காப்பகங்களில் தமிழ்நாட்டின் முதுமலை, ஆனைமலை உட்பட 12 காப்பகங்கள் சிறந்தவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.