
இந்தியாவின் வட மாநிலங்களில் இன்று பல்வேறு இடங்களில் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தசரா விழாவில் ராவணனின் உருவ பொம்மை எரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு டெல்லியில் உள்ள செங்கோட்டை மைதானத்தில் ராவணன், மேகநாதன், கும்பகர்ணன் உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டு எரிக்கப்பட்டது. இந்த நிகழ்வு ராம்லீலா என அழைக்கப்படும். இந்த நிகழ்வுக்கு முன்பாக ராமாயணம் நாடகமும் நடத்தப்படும்.
அந்த வகையில் தசரா விழாவின் இறுதி நாளான இன்று டெல்லி துவாரகா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்த விழாவில் அவர் ராமாயண நாடகத்தைக் கண்டுகளித்தார். பிறகு வில் எய்தி ராவணன் உருவ பொம்மையை எரித்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தீமையை நன்மை வென்றதன் அடையாளமாக தசரா கொண்டாடப்படுகிறது. ராவணன் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்வு என்பது பல உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும் விழா. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதைக் காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்துள்ளது, அடுத்த ராம நவமி ராமர் கோயிலில் கொண்டாடப்படும். ராமர் கோயிலில் ராமர் வாசம் செய்ய இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. ராமர் வரவிருக்கிறார்.

இன்று ராவணனை எரிப்பது வெறும் உருவ பொம்மையை எரிப்பதாக இருக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். சமூகத்தின் பரஸ்பர நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஒவ்வொரு சிதைவையும் இது எரிக்க வேண்டும். சாதிவெறி மற்றும் பிராந்தியவாதத்தின் பெயரால் இந்தியாவை பிளவுபடுத்த முயலும் சக்திகளை எரிப்பதாக இது இருக்கட்டும்” என்று பேசினார்.