Skip to main content

புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி அறிவிப்பு!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021

 

New date for Puducherry local body elections announced!

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் மாதத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 

 

அதனைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் குளறுபடி இருப்பதைச் சுட்டிக்காட்டி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குளறுபடியான இடஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்த நீதிமன்றம், இடஒதுக்கீடு குளறுபடிகளை சரிசெய்து ஐந்து நாட்களுக்குள் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டது.

 

அதையடுத்து தேர்தல் ஆணையம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை ரத்து செய்ததோடு, திருத்தப்பட்ட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டு, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பையும் திரும்பப் பெற்றது.

 

இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராய் பி. தாமஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் புதுச்சேரியில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

முதற்கட்டமாக புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகளுக்கு அக்டோபர் 11ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 18ஆம் தேதி நிறைவடையும். நவம்பர் 2ஆம் தேதி தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டமாக அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் ஆகிய பஞ்சாயத்துகளுக்கு அக்டோபர் 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 22ஆம் தேதி நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

 

மூன்றாவது கட்டமாக காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நகராட்சிகளுக்கும், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 22ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி அக்டோபர் 29ஆம் தேதி நிறைவடைகிறது. நவம்பர் 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் நவம்பர் 17ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

 

இந்த உள்ளாட்சி தேர்தலில் 4 லட்சத்து 72 ஆயிரத்து 222 ஆண்கள், 5 லட்சத்து 30 ஆயிரத்து 930 பெண்கள், 117 திருநங்கைகள் என மொத்தம் 10 லட்சத்து 3 ஆயிரத்து 755 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

இந்த தேர்தலையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்குவருகிறது. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் (http://sec.py.gov.in) அனைத்து விவரங்களும் உள்ளன. இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பார்க்கலாம். அனைத்து நடவடிக்கைகளும், அறிவிப்புகளும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் இந்திய சட்ட விதி அளித்துள்ள அதிகாரத்தின்படி செய்யப்படுகின்றன." இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனிடையே மாநில தேர்தல் ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்து, 2016ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது பின்பற்றப்படும் நடைமுறைகள்படி புதிய இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டது. இதில் பிற்படுத்தப்டோர், பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு சரிவர கையாளப்படவில்லை என்பதால் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பைக் கருத்தில்கொள்ளாத மாநில தேர்தல் ஆணையம், புதிய இடஒதுக்கீட்டுப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து இன்று (09.10.2021) கூட்டம் நடத்துகின்றனர். 

 

இதேபோல் முரண்பாடான இடஒதுக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதலமைச்சர், சட்டப்பேரவை தலைவரிடம் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியதன் பேரில் புதுச்சேரியில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இதில் எடுக்கப்படும் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்து வலியுறுத்த உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்