Skip to main content

“நேரு செங்கோலை கைத்தடியாகப் பயன்படுத்தினார்” - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published on 10/08/2023 | Edited on 10/08/2023

 

Nehru used the scepter as a crutch Union Minister Nirmala Sitharaman

 

கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை வரை நடைபெற உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

 

இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று முன்தினம் முதல் இன்று வரை மூன்றாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நம்பிக்கையில்லாத்  தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், “இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்து வருகின்றன. 2023 - 24 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5%ஆக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.  உலகிலேயே பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது.

 

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தாமதத்திற்குத் தமிழக அரசே காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தாமதமாக மேற்கொண்டதால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்குத் தாமதம் ஏற்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை. சுதந்திரம் அடைந்தபோது தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை கைத்தடியாகப் பயன்படுத்தினார் நேரு. செங்கோலை கைத்தடியாகப் பயன்படுத்தியது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா. செங்கோலை நாடாளுமன்றத்தில் பெருமைமிகு இடத்தில் பிரதமர் மோடி வைத்தால் அதை ஏற்க முடியாதா. சிலப்பதிகாரம் நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்கிறதே தவிர திராவிடர்கள் என்று சொல்லவில்லை. சிலப்பதிகாரம் என்ன சொன்னதோ, அந்த வழியில்தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்.

 

தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் கற்றுக் கொள்ளக்கூடாது என்ற திணிப்பு இருந்தது. பிரதமர் மோடி புறநானூறு, திருக்குறள் உள்ளிட்டவை பற்றிப் பேசித் தமிழைப் பெருமையடையச் செய்துள்ளார். தென்னிந்தியாவின் முன்னேற்றத்தில் மோடி அதீத கவனம் செலுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் யாரும் முதலைக் கண்ணீர் வடிக்க வேண்டாம். ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தபோது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது. மணிப்பூர், டெல்லி, ராஜஸ்தான் என எங்கு பெண்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைப்பட  வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

மேலும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி தற்போது மக்களவைக்கு வருகை புரிந்துள்ளார். மோடி மக்களவைக்கு வருகை தந்த போது ஆளும் கட்சி எம்.பி.க்கள் 'மோடி... மோடி...' என முழக்கமிட்டனர். பிரதமர் மோடியின் பதிலுரையைத் தொடர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்