இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அதிகம் பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு நேற்று (28.03.2021) ஒரேநாளில் 40,414 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, மஹாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமையில் உயர்மட்ட குழுவின் அவசரக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில், அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர், மாநில தலைமைச் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்புக்குழு, மஹாராஷ்ட்ராவில் கரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு போன்ற விதிமுறைகளை விதிக்க வேண்டும் என பரிந்துரைத்தது.
இதனையடுத்து, மாநில பொருளாதாரத்தில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான ஊரடங்கை, அமல்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்குமாறு மஹாராஷ்ட்ரா முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, மஹாராஷ்ட்ராவில் இரவு 8 மணியிலிருந்து காலை 7 மணிவரை இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.