Skip to main content

கேரளாவில் இருபதாயிரம் கோடியில் மக்களுக்கான நிவாரணம்

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

பஞ்சாப், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் நான்கு மாநில மருத்துவ மற்றும் நிர்வாக அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் கேரளாவின் கொரோனா தடுப்பு முறைகளை கேள்விப்பட்டு அங்கே வருகிறார்கள். கேரளா மேற்கொண்ட தடுப்பு மற்றும் மருத்துவ நிவாரண முறைகளைக் கண்டு வியந்தவர்கள் அதே போன்று தங்கள் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார் மாநில முதல்வரான பினராய் விஜயன்.

வெளிநாடுவாழ் இந்தியர்களைக் கொண்ட முதல் மாநிலமான கேரளா, கொடூர கொரோனாவின் தாக்கத்திலும் முதன்மையிலிருக்கிறது. ஆனாலும் துவண்டுவிடாத பினராய் விஜயன் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் துணிச்சலாகவே மேற்கொள்கிறார். ஏனெனில் வெளிநாட்டிலிருக்கும் மலையாளிகள் தங்களின் தாயகம் வந்து போவதுதான் அடிப்படைக் காரணம்.

 

Relief for people in Corona Kerala


மார்ச் 20 ல் மட்டும் ஒரே நாளில் பிரிட்டிஷ், துபாயிலிருந்து வந்தவர்களால் காசர்கோட்டில் 6, எர்ணாகுளத்தில் 5 பேர், பாலக்காட்டில் ஒருவர் என 12 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று கண்டறியப்பட்டு ஐ ஸோலேஷன் எனப்படும் தனிமைப்படுத்தும் வார்டின் அதி தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டவரகளின் கொரோனா பாஸிட்டிவ் எண்ணிக்கை 52. மாநிலம் முழுவதும் அந்தந்த மாநிலங்களின் மருத்துவர்களின் கண்காணிப்பிலிருப்பவர் (வீடுகளில்) கள் சுமார் பல ஆயிரம் பேர்கள். இவர்களில் 3 ஆயிரம் பேர்கள் அவரவர்களின் வீடுகளிலேயே தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அந்தந்த சரகத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்களால் அன்றாடம் கவனிக்கப்பட்டு வருகின்றனர். மாநிலமே பினராய் விஜயனுக்கு தோளுக்குத் தோள் நிற்கிறது. மட்டுமல்ல மூன்றாம் நிலையில் கொரோனாவின் தாக்கம் வீரியம் கொண்டவையாக இருக்கும் என்பதால் பலவிதமான முன்னேற்பாடுகள்.

 

Relief for people in Corona Kerala


பிளான் ஏ திட்டப்படி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று 40 படுக்கைகள், பிளான் பி யில் தனியார் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் 500 படுக்கைகள், பிளான் சி படி நட்சத்திர ஹோட்டல்கள், பழைய மருத்துவமனைகள், தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் போன்றவைகளை ஒருங்கிணைத்து சுமார் 3 ஆயிரம் படுக்கைகள் எனப் பக்காவாக அமைக்கப்பட்டு மருத்துவர்கள் உபகரணங்கள் என்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கொல்லம் மாவட்டத்தில் மட்டும் இப்படி என்றால் மாநிலத்திலுள்ள 19 மாவட்டங்களிலும் இதே போன்று நடவடிக்கைகள். வரும் மூன்றாம், நான்காம் நிலைகளில் கொரோனாவின் தாக்கம் கடுமையாகலாம், பாதிப்புகளின் எண்ணிக்கையும் உயர வாய்ப்பு என்பதால் இந்த முன்னேற்பாடுகள் கண்டிஷனில் உள்ளன.

கொரோனாவின் ஆரம்ப கட்டத்தாக்குதல் காரணமாக பாதிப்பில் பல ஆயிரம் குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருப்பதோடு அவர்கள் அடியோடு முடக்கப்பட்டுள்ளார்கள். மேலும் கேரளாவின் பிற தொழில்கள், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கட்டமைப்பும் நிலைகுலைந்து போயுள்ளன. இவைகளனைத்தையும் கணக்கில் கொண்ட பினராய் விஜயன் அந்த குடும்பங்களை மீட்டெடுக்க தேசத்தின் பிற மாநிலங்களின் சிந்தனையில் எட்டாத நிவாரணப் பணிகளைத் துணிச்சலாக செய்தவர் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் மார்ச்19 அன்று மீட்பு நிவாரணங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

 

Relief for people in Corona Kerala


இந்த மக்கள் நலப்பணிகள், பினராய் விஜயனின் நேரடிக் கண்காணிப்பில், ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்துறை மூலமாகச் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, இந்த நிதியின் மூலமாகக், குடும்பஸ்ரீ திட்டத்தின் கீழ்வருகிற குடும்பங்கள் உடனடிக் கடன் பெறலாம். கொரோனா தாக்கம் காரணமாக முடங்கிப்போன குடும்பங்களுக்கு இந்த மார்ச்சில் சமூகப் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும். 1320 கோடி ஒதுக்கப்பட்டதில் அவர்களுக்கான இரண்டு மாத பென்ஷன் தொகைகள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும். சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதற்கான ஒதுக்கீடு 100 கோடி. மேலும் அந்தக் குடும்பங்களுக்கான ஒரு மாத உணவிற்கான செலவு தொகையும் வழங்கப்படும்.

50 கோடி மதிப்பீட்டில் ஏப்ரலில் மாநிலம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டு அவைகளில் மக்களுக்காக இருபது ரூபாய் குறைந்த கட்டணத்தில் உணவு சப்ளை செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் புனரமைப்பிற்காக அவர்களின் மருத்துவச் செலவிற்காக ஐந்நூறு கோடி தயார் நிலையில். கேரளா முழுவதிலும், நிறுத்தி வைக்கப்பட்ட காண்ட்ராக்ட் பணிகளின் பில் தொகை ஏப்ரலில் செட்டில் செய்யப்படுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகை பதினான்காயிரம் கோடி.

 

Relief for people in Corona Kerala


கொரோனா தாக்க நேரத்தில் ஆட்டோக்கள் சிறப்பாகச் செயல்பட்டதால் மாநிலம் முழுவதிலுள்ள ஆட்டோக்களுக்கான பிட்னஸ் சார்ஜ் எனப்படும் எப்.சி. கட்டணத்தில் முழு விலக்கு. சிறு வாடகை வாகனங்கள், ஒப்பந்தப் பேருந்துகளுக்கு அரசு வரிக்கட்டணம் குறைப்பு. போக்குவரத்து டாக்ஸிகள் கட்டுகிற மூன்று மாதத்திற்கான அரசு வரிக்கட்டணத்தின் கால அவகாசம் நீட்டிப்பு. மாநிலம் முழுவதிலும், மின்கட்டணம், குடிநீர்க்கட்டணம் செலுத்துவதில் ஒரு மாதம் அலவன்ஸ் அளிக்கப்படுகிறது. இங்கே நாம் மார்ச்சுக்குள் செலுத்தியாக வேண்டும். தவிர, கேரளாவிலுள்ள அனைத்து திரையரங்குகளின் கேளிக்கை வரியினைக் குறைப்பதற்காகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் மேலாக, மாநில வங்கிகளின் அமைப்புச் செயலாருடன் பேசிய முதல்வர் பினராய்விஜயன் கேரளாவின் அனைத்து வங்கிகளிலும், கடன் பெற்றவர்களிடம் ஒரு வருடம் கடன் தொகையைக் கேட்டு நிர்ப்பத்திக்கக் கூடாது. பாக்கித் தவணைக்காக அவர்களின் இனங்களை ஜப்தி செய்யவும் கூடாது என்று வலியுறுத்தியதை வங்கிகளின் சம்மேளனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

 

Relief for people in Corona Kerala


சுற்றுலா, எஸ்டேட் தொழில் அண்டிப்பருப்பு தொழிற்சாலைகள் உள்ளிட்ட சிறு நிறுவனங்களின் மூலமாகவே சொற்ப அளவிலான வருமானத்தைக் கொண்ட கேரளா, இந்த பேரிடரில் இத்தனை பெரிய தொகையை நிவாரணமாகக் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும் நடைமுறைப்படுத்தவது அசாதாரணம் என்கிறார்கள். இவைகளனைத்தையும் சுட்டிக்காட்டி தங்களின் மாநிலத்திற்கு முறையாக வரவேண்டிய நிலுவை நிதியினை உடனே விடுவிக்கவேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் பினராய்விஜயன்.

இதனிடையே கேரள காவல்துறை கொரோனா தடுப்பு முறைபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாஸ்க் அணிந்து கைகளில் சோப்பு கொண்டு கழுவும் முறையைக் காவலர்கள் குரூப் டான்ஸ் ஆடிக்கொண்டு கானாபாட்டுப் பாடியபடி குத்தாட்டம் மூலம் வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகியுள்ளது.

கஜா, ஒக்கி, இருபெரும் புயல்களால் சிதைக்கப்பட்ட கேரளாவைப் பல்வேறு வழிகளில் புனரமைத்து மீட்டெடுத்த பினராய் விஜயன், கொடூரக் கொரோனாவின் தாக்கத்திலும் மீட்டெடுக்க அசுரபலத்துடன் போராடி வருகிறார்.

 

 

சார்ந்த செய்திகள்