Skip to main content

“காங்கிரஸ் கூட்டணி என்பது பிரேக் இல்லாத வாகனம்” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 08/11/2024 | Edited on 08/11/2024
Pm Modi criticizes congress alliance in maharashtra

மகாராஷ்டிராவில், வரும் நவம்பர் 20ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், நவம்பர் 23ஆம் தேதியன்று எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 

இந்த தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்திக்கிறது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கூட்டணி கட்சிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பா.ஜ.க கூட்டணி கட்சிகளும், புதிதாக ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், இன்று முதல் ஒரு வாரத்துக்கு பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரவு திட்டுமிட்டு இன்று மதியம் பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வந்தார். அதன் பின்பு, துலே பகுதியில் பா.ஜ.க சார்பில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக நிறுத்தும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் ஆடுகிறது. பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் முன்னேற்றத்தை காங்கிரஸால் பார்க்கவே முடியாது என்பதால் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு. பட்டியலின- பழங்குடியின மக்கள் பலவீனமாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் எப்போதும் விரும்புகிறது. 

காந்தி குடும்பத்தின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த யுவராஜ் இந்த ஆபத்தான நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். சமூகங்கள் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து, பலவீனமடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாட்டின் அனைத்து பழங்குடி சமூகங்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதே காங்கிரஸின் செயல்திட்டம். மதக் குழுக்களுடன் காங்கிரஸ் இந்த சதியை முயற்சித்தபோது, ​​அது நாட்டைப் பிரிப்பதற்கு வழிவகுத்தது. இப்போது காங்கிரஸ், பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களை, ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டி வருகிறது. இந்தியாவிற்கு பெரிய சதி வேறு எதுவும் இருக்க முடியாது. நீங்கள் ஒற்றுமையாக இருக்கும் வரை நீங்கள் வலுவாக இருப்பீர்கள். 

மகா விகாஸ் அகாடி கூட்டணி, பெண்களை இழிவுப்படுத்துகிறது. ஒவ்வொரு பெண்களும், இந்தியா கூட்டணி கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும். மகாராஷ்டிராவுக்குத் தேவையான நல்லாட்சியை மகாயுதி கூட்டணி அரசால் மட்டுமே வழங்க முடியும். மறுபுறம், மகா விகாஸ் அகாடி என்பது சக்கரங்களும் பிரேக்குகும் இல்லாத வாகனம், அங்குள்ள அனைவரும் ஓட்டுநர் இருக்கையில் அமர சண்டை போடுகிறார்கள்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்