ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சிம்லாவில் உள்ள சிஐடி காவல்துறையின் தலைமையகத்தில் இணையவழி குற்றப் பிரிவு நிலையத்தை, முதல்வர் சுக்விந்தர் சிங் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, முதல்வர் சுக்விந்தர் சிங் சாப்பிடுவதற்காக, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்த சமோசாக்கள், கேக் உள்ளிட்ட திண்பண்டங்கள் வரவழைக்கப்பட்டன. அப்போது, அந்த சிற்றுண்டியை முதல்வருக்கு வழங்காமல், அவருடைய பாதுகாவலர்களுக்கு அங்கிருந்தவர்கள் வழங்கியுள்ளனர்.
முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு வழங்கப்பட வேண்டிய சமோசா உள்பட மற்ற திண்பண்டங்கள் அவருடைய பாதுகாவலர்களுக்கு வழங்கப்பட்டது குறித்து சிஐடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சமோசாக்களும் கேக்குகளும் முதல்வரின் பாதுகாவலர்களுக்கு வழங்கியதற்கு பெண் சார் கண்காணிப்பாளர்கள் தான் காரணம் என்றும் இது மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை என்றும் தெரிவித்து அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.