ஜம்மு- காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (28/11/2020) காலை தொடங்கிய நிலையில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகு முதல் முறையாக ஜம்மு- காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சிலின் (District Development Councils- 'DDCs') முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றன.
முதற்கட்டமாக ஜம்முவில் 18 இடங்கள், காஷ்மீரில் 25 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஜம்முவில் 124 வேட்பாளர்கள், காஷ்மீரில் 172 வேட்பாளர்கள் என மொத்தம் 296 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் கடைசி கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 19- ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 22- ஆம் தேதி காலை தொடங்கி, அன்று இரவுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் காரணமாக ஜம்மு- காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் ராணுவ வீரர்கள், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.