பந்த் முழு உடற்தகுதியுடன் மீண்டும் அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது தாயினை பார்ப்பதற்காக காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையாக காயமடைந்த பந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “பந்த் சாலையில் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாகச் செல்லவில்லை. அவர் மது அருந்திவிட்டும் வாகனத்தை இயக்கவில்லை. அவர் மது அருந்தி இருந்தால் டெல்லியிலிருந்து வாகனத்தை இயக்கிக் கொண்டு வந்திருக்க முடியாது. பந்த் குடிக்கவில்லை என்பதை டெல்லியிலிருந்து விபத்து நடந்த இடம் வரை இருக்கும் சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கின்றன” எனக் கூறினர்.
மேலும் ரிஷப் பந்த்தினை மருத்துவமனையில் நேரடியாக சந்தித்துப் பேசிய டெல்லி கிரிக்கெட் அசோசியேட் டைரக்டர் ஷியாம் சர்மா அவர் குறித்து தகவல்களைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘பந்த் குணமாகி வருகிறார். பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற வைக்க ஏற்பாடு செய்து வருகிறது என்றும் சாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்டபோது தான் விபத்து ஏற்பட்டது என ரிஷாப் பந்த் கூறியதாகவும்’ ஷியாம் சர்மா கூறியுள்ளார்.
பந்த்திற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பந்த்-இன் உடல்நிலை குறித்து கூறியதாவது, “பந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மீண்டும் அணிக்குத் திரும்ப ஓராண்டு ஆகலாம். பந்த் ஓய்வெடுப்பதற்கான போதுமான நேரம் கிடைக்க வேண்டும். காயங்கள் காரணமாக பந்த் இன்னும் வலியுடன்தான் இருக்கிறார். ஆனாலும் பந்த் தன்னைப் பார்க்க வருபர்களிடம் பேசுகிறார். இது அவரது காயங்கள் குணமாகும் திறனைக் குறைக்கிறது. பந்த் நன்றாக ஓய்வெடுத்தால் விரைவில் குணமடையலாம்” எனத் தெரிவித்தனர்.