Skip to main content

“நாட்டுக்கு படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து...” - அரவிந்த் கெஜ்ரிவால்

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

"It is dangerous for the country to have an illiterate Prime Minister." - Arvind Kejriwal

 

பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. 1978 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பும், டெல்லி பல்கலைக்கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதுகலை பட்டப் படிப்பும் படித்தார் என்று கூறப்பட்டு வருகிறது. இதனால் 1978 ஆம் ஆண்டு மற்றும் 1983 ஆம் ஆண்டு படித்த அனைத்து மாணவர்கள் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் படிப்பு சான்றிதழ் குறித்த விவரங்களை வழங்கலாம் என மத்திய தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

 

இந்நிலையில், இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில், மோடியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகத்தின் பொதுத் தகவல் அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் பொது தகவல் அதிகாரிகள் வழங்குமாறு உத்தரவிட்ட மத்திய தலைமை தகவல் ஆணையத்தின் உத்தரவை நீதிபதி பீரன் வைஷ்ணவ் ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் இதனை நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என அந்த தீர்ப்பில் உத்தரவிடப்பட்டது. 

 

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமரின் கல்வி தகுதியை இந்த நாடு அறிய உரிமை இல்லையா. தான் பெற்ற பட்டத்தை அவர் நீதிமன்றத்தில் ஏன் சமர்ப்பிக்கவில்லை. அவர் பெற்ற பட்டம் குறித்து கேள்வி எழுப்புகிறவர்கள் மீது ஏன் அபராதம் விதிக்கப்படுகிறது. நாட்டுக்கு படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து” என்று பதிவிட்டுள்ளார். 

 

முன்னதாக ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கண்டனம் தெரிவித்திருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “சுதந்திர இந்திய வரலாற்றில் வெறும் 12வது தேர்ச்சி பெற்ற ஒரு பிரதமர் நமக்கு இருந்ததில்லை” என்று மோடி குறித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்