Skip to main content

"மத்திய ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்" - கபில் சிபல் காட்டம்

 

union minister of railways speaks irresponsibly kapil sibal

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில் துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த அறிவிப்பில் 'மீட்பு பணிகள் நிறைவடைந்து தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தனது ட்விட்டரில், "ரயில் விபத்து குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். ரயில்வே, மின்னணுவியல், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என இத்தனை அமைச்சக பொறுப்புகளையும் அஸ்வினி வைஷ்ணவ் ஒருவரால் கவனிக்க முடியவில்லை. வந்தே பாரத் மற்றும் புல்லட் ரயில் சேவைகளில் கவனம் செலுத்தும் மத்திய அரசு சாதாரண மக்களுக்கான ரயில் சேவையை சரியாக கவனிப்பதில்லை. ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !