Skip to main content

எதிர்ப்பு குழுவுடன் சமாதானம் செய்துகொள்ள தலிபான் திட்டம்?

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

taliban

 

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 

இதற்கிடையே ஆப்கான் அதிபராகத் தன்னை அறிவித்துக்கொண்டுள்ள அம்ருல்லா சாலே, தலிபான் எதிர்ப்புக் குழு ஒன்றின் தலைவராக இருந்த அகமது ஷா மசூத்தின் மகனான அஹமத் மசூத்துடன் இணைந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு போராளி குழுவை உருவாக்கியுள்ளார். இந்த குழு, இதுவரை தலிபான்களால் கைப்பற்ற முடியாத பாஞ்ஷிர் பகுதியில் தற்போது உள்ளது.

 

இந்தச்சூழலில் நூற்றுக்கணக்கான தலிபான்கள் தற்போது, பாஞ்ஷிர் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு இருதரப்புக்குமிடையே மோதல் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதேநேரத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய அஹமத் மசூத், "பேச்சுவார்த்தைதான் ஒரே வழி என நாங்கள் தலிபான்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். போர் மூளுவதை நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேநேரத்தில் பாஞ்ஷிர் மீது தலிபான்கள் போர் தொடுக்க முயன்றால், தனது ஆதரவாளர்கள் போரிட தயாராக இருப்பதாகவும் அஹமத் மசூத் கூறியுள்ளார். அதேபோல் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித்தும், தலிபான்கள் பாஞ்ஷிர் பகுதியில் உள்ளவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாஞ்ஷிர் விவகாரத்தில் அமைதியான தீர்வை காண விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

இதற்கிடையே ஆப்கான் விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசு வரும் 26 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்கான் விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி அவைத்தலைவர்களுக்கு விளக்கம் அளிக்குமாறு பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்தியதையடுத்து இந்த அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எதிர்க்கட்சி அவைத்தலைவர்களுக்கு ஆப்கான் விவகாரம் குறித்து விளக்கமளிக்கவுள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்