ரஷ்யா, கடந்த 24 ஆம் தேதி உக்ரைன் மீதான போரை தொடங்கியது. ரஷ்ய அதிபர் புதினின் இந்த அதிரடி முடிவு, சர்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் எதிரொலித்தது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 105 ரூபாயை தாண்டியது. இதனால் பெட்ரோல் -டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கத்திய நாடுகள் எரிவாயு சம்பந்தமான துறைகளை மட்டும் தவிர்த்துவிட்டு ரஷ்யா மீது பொருளாதர தடைகளை விதித்தது.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கும் கீழ் குறைந்தது. இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த இருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை விடுவிக்க தயார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அரசாங்கம் உலகளாவிய எரிசக்தி சந்தைகளையும், புவிசார் அரசியல் சூழ்நிலையினால் ஆற்றல் விநியோக இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தனது குடிமக்களுக்கு ஆற்றல் நீதியை உறுதிசெய்வதற்காகவும் மற்றும் நிகர பூஜ்ஜிய எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்திற்காகவும், நிலையான விலையில் எரிவாயு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க இந்தியா தயாராக உள்ளது. சந்தையில் எரிவாயு விலையின் நிலையற்றதன்மையை தணிக்கவும், கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தணிக்கவும் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களில் இருந்து கச்சா எண்ணெய்யை வெளியிடும் முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இறுதியில் கச்சா எண்ணெய் விலையை குறைக்க இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களது மூலோபாய இருப்பிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் கச்சா எண்ணெய்யை விடுவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.