Skip to main content

மது அருந்துவதை தடுத்த மனைவி; ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 Incident happened at husband in anger for A wife who abstains from drinking alcohol

உத்தரப்பிரதேசம் மாநிலம், நைத்துவா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ் சக்சேனா. இவருக்கு ஷானோ என்ற பெண்ணுடன் திருமணமாகி, 8 மற்றும் 5 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். முனீஸ் மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்.

அதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று (07-03-24) இரவு முனீஸ் வழக்கம் போல், மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மது போதையில் வீடு திரும்பிய முனீஸுக்கும் அவரது மனைவி ஷானோவுக்கும் தகராறு ஏற்பட்டது.  இதனையடுத்து, முனீஸ் தனது வீட்டிலேயே மது குடித்துள்ளார். அப்போது,  அவர் வீட்டில் குடிப்பதை ஷானோ தடுக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனீஸ், தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மனைவி ஷானோ மீது ஊற்றித் தீ வைத்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஷானோவின் மாமியார் முன்னி தேவி, ஷானோவை காப்பாற்ற முயன்றபோது அவருக்குத் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அங்கு வந்து ஷானோ மீது ஏற்பட்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும், ஷானோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஷானோவின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷானோவை காப்பாற்ற முயன்றதில் தீக்காயம் அடைந்த மாமியாரை மீட்டு மேல்சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, தலைமறைவாகியுள்ள முனீஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மது அருந்துவதைத் தடுக்க முயன்ற மனைவி மீது கணவன் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.