ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லலித் திமான். இவர் அந்த பகுதியில் சிறிய அளவிலான கான்கிரீட் தொழில் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவருக்கு சமீபத்தில் ரூ.210,42,08,405 (ரூ.210 கோடி) என மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லலித் திமான், உடனடியாக மின்வாரியத்துறை அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து கூறியுள்ளார். இதனையடுத்து, அவருக்கு வந்திருக்ககூடிய பில்லை வைத்து அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அதில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிக கட்டணம் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகள், அந்த சிக்கலை சரிசெய்து, பில் தொகையை சரியான தொகையான ரூ.4,047க்கு கொண்டு வந்துள்ளனர். கணினியில் தவறான மீட்டர் ரீடிங் உள்ளிடப்பட்டதால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.