ஜார்கண்ட் மாநிலத்தில் சமூக விழிப்புணர்வு பிரச்சரத்திற்கு சென்ற அரசுசாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த இளம்பெண்கள் ஐந்து பேர் துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் கண்டி மாவட்டத்தில் கோச்சாங் என்ற கிராமத்திற்கு ஆள்கடத்தல் மற்றும் புலம்பெயர்தல் பற்றிய சமூக விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தெருவோர நாடகங்கள் நடத்த ஆண், பெண் என பலர் அரசுசாரா தொண்டு நிறுவனத்தின் சார்பில் அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் அந்த கிராமத்திற்கு சென்ற உடனே கிராமத்திலுள்ள பதல்கர்கி என்ற அமைப்பு இந்த கிரமம் கிராம சபையின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே இதுபோன்றது அரசு அல்லது அரசுசாரா என எதுவும் எங்களுக்கு வேண்டாம் என எச்சரித்திருந்தனர்.
ஆனால் அந்த குழு தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்சாரங்களை நடத்தி முடித்துவிட்டு மிஷினரி பள்ளியில் தங்கி வந்தனர். அப்போது திடீரென்று அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் ஆண் பெண் என அனைவரையும் கடத்தி காட்டுபகுதிக்கு கூட்டி சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். ஆண்களை அடித்து அவர்களை சிறுநீர் அருந்த வைத்துள்ளனர். பிறகு ஆண்களை காரிலேயே அடைத்து வைத்துவிட்டு ஐந்து பெண்களை காட்டின் உட்பகுதிக்கு அழைத்து சென்று கூட்டாக வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் அதை வீடியோவும் பதிவுசெய்துள்ளனர்.
இது பற்றி காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நபர்கள் தங்கள் பகுதிக்குள் அனுமதியில்லாமல் அரசின் திட்டங்களை பரப்பும் நோக்கில் இனி வரக்கூடாது எனவும் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.