டெல்லியில் நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (18/11/2019) தொடங்கி, டிசம்பர் மாதம் 13- ஆம் தேதி வரை 20 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல உள்ளதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஜெ.என்.யூ பல்கலைக்கழகம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி ஜெ.என்.யூ பல்கலைக்கழக விவகாரத்தை சுமுகமாக தீர்க்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மாணவர்கள்- நிர்வாகம் இடையே மோதல் ஏற்படுவதால் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்த குழுவில் யு.ஜி.சி முன்னாள் தலைவர் வி.எஸ். சவுகான், யு.சி.ஜி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் குழுவில் உள்ளனர். அகில இந்திய தொழில் நுட்பக்கல்விக்கான கவுன்சிலின் தலைவர் அனில் ஹாஸ்ரபுத்தேவும் 3 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளார். மாணவர்கள் தங்களின் கோரிக்கையை குழுவிடம் தரலாம் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும் ஜெ.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று கொண்டிருந்த போது, அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.