
அலகாபாத் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மா, சில மாதங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி, அவர் சில மாதங்களாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது குடும்பத்தோடு நீதிபதி யஷ்வந்த் வர்மா வெளியூர் சென்றிருந்த நிலையில், டெல்லியில் அவர் குடியிருந்த வீட்டில் திடீரென்று தீப்பிடித்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வீட்டில் வேறு எங்காவது தீ பற்றி எரிந்துள்ளதா? என்பது குறித்து தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில பணக்கட்டுக்கள் தீயில் கருகி சாம்பலானது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் உச்சநீதிமன்ற நீதிபதியான சஞ்சீவ் கண்ணாவுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில், நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஜொலிஜியம் உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தியதில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் நீதிமன்றத்துக்கே திருப்பி பணியிட மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பஞ்சாப், ஹரியானா தலைமை நீதிபதி ஷீல் நாகு, ஹிமாச்சல் பிரதேச தலைமை நீதிபதி சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய 3 பேர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமைத்தார். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உள்விசாரணை தொடர்பாகவும், வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் தொடர்பாகவும் யஷ்வந்த் வர்மாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு நீதிபதி யஷ்வந்த் வர்மா பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘எனக்கு எதிராக சதி நடக்கிறது, வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் பணத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் என்னை சிக்கவைக்க முயற்சி நடக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.