Skip to main content

“சிறிய அழுத்தத்திற்கே நிதிஷ்குமார் யூ-டேர்ன் அடித்துவிட்டார்” - ராகுல் காந்தி

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Rahul Gandhi says We don't need Nitishkumar

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ‘பாரத் நீதி யாத்திரை’ எனும் பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்ட நடைப்பயணம் கடந்த 14 ஆம் தேதி முதல் மணிப்பூரிலிருந்து தொடங்கியுள்ளது. மேலும், மும்பை வரை இந்த யாத்திரையை மேற்கொண்டு மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தவுள்ளதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் வந்த ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது பீகார் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. இதற்கிடையே, இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் தனது பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.க ஆதரவோடு மீண்டும் முதல்வரானார். மேலும் அவர், இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இந்த திடீர் அரசியல் திருப்பத்தை அடுத்து ராகுல் காந்தி பீகார் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் புர்னியா பகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்று (30-01-24) பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் உள்ள மக்கள் தொகையை கணக்கெடுக்க எக்ஸ்ரே எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சமூக நீதிக்கான முதல்படி எக்ஸ்ரே எடுப்பது தான். நிதிஷ்குமார் ஏன் கூட்டணியில் இருந்து விலகினார் என்பது எனக்கு புரிகிறது. பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி அவரிடம் நேரடியாக கூறினேன். காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இணைந்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ்குமாரை வலியுறுத்தினோம். ஆனால், இந்த கணக்கெடுப்பு பா.ஜ.க.வினரை பயத்தை உண்டாக்கியது.

சாதிவாரி கணக்கெடுப்பு திட்டத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்தது. இதில் நிதிஷ்குமார் சிக்கிக் கொண்டார். மேலும், நிதிஷ்குமாரை பின் வாசல் வழியாக வெளியேற பா.ஜ.க வழி கொடுத்துள்ளது. சிறிய அழுத்தத்திற்கே அவர் யூ-டேர்ன் அடித்துவிட்டார். பீகாரில் சமூக நீதியை வழங்குவது இந்தியா கூட்டணியின் பொறுப்பு. அதற்கு நிதிஷ்குமார் எங்களுக்கு தேவையில்லை” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்