ரஷ்யா, உக்ரைன் மீது மூன்றாவது நாளாக தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே உக்ரைனில் உள்ள இந்தியர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைத்து வந்து, அங்கிருந்து அவர்களை விமானங்கள் மூலம் மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த மீட்பு பணியில் சரியான ஒருங்கிணைப்பு இல்லை என குற்றஞ்சாட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார்.
கே.சி. வேணுகோபால் தனது கடிதத்தில், “மீட்பு திட்டத்தை செயல்படுத்துவதில், உக்ரைனின் எல்லைபகுதிகளில் கூட இந்திய தூதரக அதிகாரிகளிடம் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. உதவி எண்களையும், கட்டுப்பாட்டு அறைகளையும் தொடர்புகொள்ள முடியவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். வெவ்வேறு நகரங்களில் சிக்கியுள்ளவர்களால் அதிகாரிகளை தொடர்புகொள்ள முடியவில்லை. பாதகமான காலநிலை காரணமாக பெரும்பாலானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அண்டை நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைக்க எல்லைப் பகுதிகளுக்கு மத்திய அரசு, ஒரு குழுவை கூட அனுப்பவில்லை என்பது மிகவும் கவலையளிக்கிறது” என கூறியுள்ளார்.
மேலும் அவர் தனது கடிதத்தில், ”மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை சரியான முறையில் மீட்க எல்லைப்பகுதிகளில் உடனடியாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.