Skip to main content

மகன் தோற்க வேண்டும் தந்தை பேச்சு; நாய்கள் போன்றவர்கள் மகன் பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
competition retaliated Father Congress, son BJP in kerala

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன்படி, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில்,  கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி, பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, பா.ஜ.கவில் சேர்ந்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.ஆண்டனி, பா.ஜ.க வேட்பாளரான தனது மகன் இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மோடி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல்வர் பினராயி விஜயனை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது. பா.ஜ.க கீழே செல்கிறது. நாங்கள் ஆட்சி அமைக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். பா.ஜ.க சார்பில் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.கவில் இணைந்தது தவறு. அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை குடும்பமும், அரசியலும் வேறு வேறு தான்.

காங்கிரஸ் எனது மதம். மத்தியில் ஆளும் கட்சி இந்தியா என்ற கருத்தையே அழிக்க முயல்கிறது. தயவு செய்து இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்திலேயே பா.ஜ.க வேட்பாளர்கள் இருப்பார்கள். சபரிமலை பெண்கள் நுழைவு சர்ச்சையால் 2019 பொதுத் தேர்தலின் போது பா.ஜ.கவின் பொற்காலம் இருந்தது. மேலும் அவர்கள் சில கூடுதல் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, பாஜகவுக்கு சாதகமாக எந்த காரணியும் இல்லை. மேலும் அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெறப் போகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனம் நாசமாகி, ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். அந்த ஆபத்தை நாம் போக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் இந்த கருத்துக்கு அவரது மகனும், பா.ஜ.க வேட்பாளருமான அனில் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏ.கே.ஆண்டனி மீது பரிதாபப்படுகிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு வயது 84. அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், தேச விரோத காந்தி குடும்பத்துக்காக பணியாற்றி, ஆயுதப்படைகளை அவதூறு செய்த எம்.பி.க்காக பேசி வருகிறார். காலாவதியான எண்ணங்களைக் கொண்ட சில காலாவதியான தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்காக வேலை செய்பவர்கள் நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள் போன்றவர்கள்” என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் கருத்துக்கு அவரது மகனான பா.ஜ.க வேட்பாளர் பதிலடி கொடுத்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்