Skip to main content

புல்டோசர் நடவடிக்கை; ‘மன்னிக்க முடியாது’ - உச்சநீதிமன்றம் அதிரடி!

Published on 13/11/2024 | Edited on 13/11/2024
 Supreme Court on bulldozer action

நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டவர்களின் கட்டிடங்கள் உள்பட எந்த கட்டிடத்தையும் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இடிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது. இருந்த போதும், சில அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘குற்றம்சாட்டப்பட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பிற்கு விரோதமான செயலாகும். தங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அதிகாரிகளின் தன்னிச்சை நடவடிக்கைகளை, மன்னிக்க முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு, மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அவசியமானதாகும். வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு ஆகும். அத்தகையை கனவு கலைந்து போய்விடக் கூடாது. வீடுகளை இடித்து அந்த பெண்கள், குழந்தைகள் சாலைகளில் இருப்பது சரியானது அல்ல. 

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை காக்க வேண்டும். வீட்டை இடிக்கும் வழங்கும் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர கால அவகாசம் வழங்க வேண்டும். நீர்நிலைகள் போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது” எனத் தெரிவித்தனர். 

சார்ந்த செய்திகள்