நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஜ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், “பா.ஜ.க வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆதரவாக மோடியும், அமித்ஷாவும் மேடை ஏறி பிரச்சாரம் செய்தனர். ரேவண்ணா ஆயிரக்கணக்கான பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைப் பற்றி மோடி என்ன சொல்கிறார் என்று நான் கேட்க விரும்புகிறேன்?. நமது உள்துறை அமைச்சர் இதைப் பற்றி என்ன சொல்கிறார்? இந்த விவகாரம் குறித்து அவர்கள் மெளனம் சாதிப்பது ஏன்?. எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்கு சென்றாலும் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் இந்த வகையான குற்றவாளி, இந்த வகையான அரக்கன் நாடு முழுவதும் சுற்றித் திரிகிறார். அவரை கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கள். இப்படிப்பட்ட கூற்றை எப்படி நம்புவது?” எனத் தாக்கி பேசினார்.
இந்த நிலையில், பிரியங்கா காந்தி பேச்சுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார். இது குறித்து அமித்ஷா செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, “நாட்டின் மகளிருடன் நாங்கள் நிற்கிறோம் என்பது பா.ஜ.கவின் நிலைப்பாடு. காங்கிரஸிடம் நான் கேட்க விரும்புவது, கர்நாடகாவில் யாருடைய ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி தான் அங்கு நடக்கிறது. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்பதால் நாங்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை, மாநில அரசுதான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மிகவும் தீவிரமானது. எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. காங்கிரஸிடம் நாங்கள் கேட்க விரும்புகிறோம், ஆட்சியில் இருந்தும், அரசாங்கம் ஏன் இன்னும் செயல்படவில்லை? இது குறித்து பிரியங்கா காந்தி, என்னிடமோ அல்லது பிரதமரிடமோ கேட்காமல் அவர்களின் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.