உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டிருந்தாக தொடரப்பட்ட வழக்கில், மசூதியை ஆய்வு செய்ய உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி, ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறையில் அங்கு 4 பேர் பலியாகினர். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதே போல் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதி என பல்வேறு மசூதிகள், இந்து கோயில்களை இடித்துக் கட்டப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அந்த விசாரணை நடைபெற்று வருகின்றன. இதில், ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு நீதிமன்றத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, தொல்லியல் ஆய்வு நிறுவனம் அங்கு ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டில் ஆய்வு நடத்த வேண்டும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கிண்டலாக தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், “சட்டவிரோதமாக புல்டோசர் மூலம் அப்பாவி மக்களின் வீடுகள் இடிக்கப்படுகின்றன. இது வளர்ச்சியல்ல அழிவு. முதல்வர் கையில் வளர்ச்சிக் கோடு இல்லை, அழிவின் ரேகை உள்ளது. பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் ஊழல் உச்சத்தில் உள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடையவில்லை. பாஜக அரசு தனது தோல்வியை மறைக்கவும், பொதுமக்களின் பிரச்சினைகளை திசை திருப்பவும் பல்வேறு இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து வருகிறது.
லக்னோவில் முதல்வர் இல்லத்தின் கீழ் சிவலிங்கம் உள்ளது. இது எங்களுக்குத் தெரியும். அதையும் தோண்ட வேண்டும். இப்படி தேடிக்கொண்டே இருப்பார்கள். ஒரு நாள், குழி தோண்டி, தங்கள் அரசாங்கத்தையே தோண்டி எடுப்பார்கள். சம்பல் பகுதியில் வன்முறை சம்பவத்தை அடுத்து இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேடப்பட்டு வந்த அட்னான் என்ற நபர் சிசிடிவி அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு டெல்லியில் உள்ள பாட்லா ஹவுஸில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நபரும் அவரது சகாக்களும் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசிடம் நிலம் இல்லை. இப்போது, விவசாயிகளை நாசமாக்குவதில் அரசு குறியாக உள்ளது. 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த விரும்புகிறது. முதலீடு என்ற பெயரில் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது பாஜக அரசு. மற்ற நாடுகளுக்குச் செல்லும்போது, நிறைய கற்றுக்கொள்கிறோம். உலகம் எங்கு செல்கிறது என்று? இங்குள்ள மக்கள் எதில் சிக்கிக் கொள்கிறார்கள்? இனிவரும் காலங்களில் உத்தரபிரதேச மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடுவார்கள் என நம்புகிறோம். மீண்டும் ஒருமுறை வளர்ச்சி மற்றும் செழிப்புப் பாதையில் செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.