இந்தியா, சீனா இடையேயான எல்லைப்பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
இந்திய, சீன எல்லைப் பகுதியில் இருநாட்டு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சனை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இந்தச் சூழலில், இந்திய எல்லைப்பகுதியில் அமைத்திருந்த தற்காலிகக் கூடாரங்களை அப்புறப்படுத்தி பின்வாங்கியுள்ளது சீனா. இந்நிலையில் இதில் இருநாட்டு ராணுவமும் ஒப்பந்தத்தை மதித்துச் செயல்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. எல்லைப்பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அஜித் தோவல் நேற்று பேசியுள்ளார் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் இடையே நேற்று நடைபெற்ற இந்தத் தொலைபேசி உரையாடலில், இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்தத்தின்படி விரைவில் இருநாட்டு ராணுவத்தினரும் எல்லைப்பகுதியில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான செயல்களைத் துரிதப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு இணங்க இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் அமைதியை முழுமையாகவும் நீடித்ததாகவும் மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்காக அஜித் தோவல் மற்றும் வாங் யி மத்தியிலான பேச்சுவார்த்தைத் தொடரும் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.