இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி, கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இன்று இந்தியா, 100 கோடி தடுப்பூசி டோஸை செலுத்தி சாதனை படைத்துள்ளது. தடுப்பூசி செலுத்த தொடங்கிய ஒன்பது மாதங்களில் இந்தியா 100 கோடி டோஸ்களை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி சாதனை படைத்ததற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, "இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்திய அறிவியலின் வெற்றியை, 130 கோடி இந்தியர்களின் கூட்டுணர்வின் வெற்றியை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். 100 கோடி தடுப்பூசிகளை செலுத்திய இந்தியாவிற்கு வாழ்த்துகள். நமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உழைத்த அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள டாக்டர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள தடுப்பூசி மையத்திற்கு சென்று, அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்திருந்த பயனர்களிடமும், அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடமும் உரையாடினார்.
இதன்பின்னர் அங்கிருந்து விடைபெறும்போது செவிலியர்கள் உள்ளிட்டோர்களை நோக்கி, இரு கை கட்டை விரல்களையும் உயர்த்து காட்டி, 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார்.