ஸ்டார்ட்அப் எனப்படும் ஆரம்பகால நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது கட்டுப்பாடுகளை எளிமைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், 2018ஆம் ஆண்டு முதல் ஆய்வு தொடங்கப்பட்டது. அவை ‘சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள், முன்னணி செயல்திறன் கொண்ட மாநிலங்கள், தலைமை வகிக்கும் மாநிலங்கள், ஆர்வமாக வளரும் மாநிலங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொடக்க சுற்றுசூழல் அமைப்பு மாநிலங்கள்’ என்று ஐந்து வகைகளின் கீழ் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், போட்டித்தன்மை மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி என்ற தொலைநோக்குத் திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தையும் இது கொண்டதாகும்.
இந்த நிலையில், டெல்லியில் ஸ்டார்ட்அப் விருதுகள் மற்றும் மாநில தரவரிசை விருதுகள் வழங்கும் விழா நேற்று (16-01-24) நடைபெற்றது. அதில், தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை, 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் சிறந்த செயல்திறனுக்காக 2022ஆம் ஆண்டுக்கான பட்டியலில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியலில்,கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது திராவிட மாடல் ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது. TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.