பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து என்பவர் கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார். இதில் கோவிலில் கடை ஒதுக்குவது சம்பந்தமாக பட்டியலின கோவில் பூசாரி நாகமுத்துவுக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7-ந்தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். அதன் அடிப்படையில் ஓ.ராஜா உள்பட ஏழு பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் பாண்டி இறந்து விட்டதால் மீதி ஆறு பேர் மீது வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்குத் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட ஓ.ராஜா உட்பட ஆறு பேரையும் இன்று(13.11.2024) நீதியரசர் முரளிதரன் விடுதலை செய்தார். அதைக் கண்டு ஓ.ராஜா உட்பட அவருடன் வந்த ஆதரவாளர்கள் சந்தோச வெள்ளத்தில் மூழ்கினார்கள்.
ஆனால் பாதிக்கப்பட்ட நாகமுத்து தந்தை சுப்புராஜீம் அவருடன் வந்த சில உறவினர்களும் மனம் நொந்துபோய் விட்டனர். ஓ.ராஜா கோர்ட்டுக்கு வந்த போதே எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் சர்வ சாதாரணமாகத்தான் வந்தார். தன்னுடன் வந்த ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அதுபோல் இந்த வழக்கில் ஓ.ராஜாவுக்கு எதிராக தீர்ப்பு வரும் என்றால் போலீஸ் பாதுகாப்பையும் கோர்ட்டில் பலப்படுத்தி இருப்பார்கள். ஆனால் போலீசார் கோர்ட்டில் இல்லாமல் இருந்ததால் இந்த வழக்கு ஓ.ராஜாவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்ற பேச்சு அங்கிருந்த சில வக்கீல்கள் மத்தியிலும் பேசப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தான் நீதியரசர் முரளிதரன் அந்த ஆறு பேரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.
இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நாகமுத்துவின் தந்தை சுப்புராஜீடம் கேட்டபோது, “12 வருடங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜாவால் என் மகன் தற்கொலை செய்து கொண்ட போதே அப்போது ஓ.பி.எஸ். அதிகார பலத்தில் இருந்ததால் வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி என்னிடம் இரண்டு கோடி வரை பேரம் பேசினார்கள். அதற்கு நான் அடிபணியவில்லை. என் மகன் சாவிற்கு காரணமான ஓ.ராஜா உட்பட அந்த ஏழு பேரும் கண்டிக்கப்படும் என்ற நோக்தக்தில் தான் தொடர்ந்து போராடி வந்தேன்.
அப்போது ஆளுங்கட்சியாக ஓபிஎஸ் இருந்ததால் போலீசிலிருந்து வக்கீல்கள் வரை அனைத்து ஆதாரங்களையும் மூடி மறைக்க பார்த்தனர். அதனால் தான் இந்த வழக்கில் தேனி மாவட்டத்தில் நடக்கக் கூடாது வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதைத் தொடர்ந்துதான் திண்டுக்கல் கோர்ட்டிற்கு மாற்றினார்கள். அதுபோல் மூத்த வழக்கறிஞரான ப.பா.மோகனும் எங்களுக்காக தொடர்ந்து போராடி பல சாட்சியங்களையும் கொண்டு வந்து வாதாடினார். அதன்மூலம் என் மகன் சாவிற்கு காரணமான ஓ.ராஜா உள்பட ஆறு பேருக்கும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் ஜாதி, பணபலம், ஆள்பலம் மூலம் ஓ.ராஜா தரப்பினர் வெற்றி பெற்றுவிட்டனர். இருந்தாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். அதன்மூலம் என் மகன் சாவிற்கு காரணமான ஓ.ராஜா உள்பட ஆறு பேருக்கு தண்டனையும் அவசியம் எங்க வக்கீல் வாங்கிக் கொடுப்பார் அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.