Skip to main content

“புதுமைப் பெண் திட்டம் மூலம் ஐந்து லட்சம் மாணவிகள்  மாதந்தோறும்  பயனடைகின்றனர்” - அமைச்சர் சக்கரபாணி 

Published on 15/11/2024 | Edited on 15/11/2024
5 lakh students are benefited every month through pudhumai pen  scheme

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிமந்தையம்  ஊராட்சியில் ரூ.31.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடத்தை திறந்து வைத்து, ரூ.14.24  கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு உணவு மற்றும்  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில், பேசிய அமைச்சர் சக்கரபாணி, “தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து,  எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால  ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்றியதோடு மட்டுமின்றி, சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். ஆட்சிப்பொறுப்பெற்ற சமயத்தில்  கொரோனா பேரிடர் காலத்தில் பொது மக்களை பாதுகாப்பதற்காக குடும்ப  அட்டைக்கு ரூ.4,000 வழங்கப்பட்டது. இதன்மூலம் சுமார் 2.09 கோடி குடும்ப  அட்டைதாரர்கள் பயனடைந்தனர். அதேபோல் 14 வகையான  மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. 

அதேபோல், அரசு  நகரப் பேருந்துகளில் மகளில் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் பெண்களின் பயணச்செலவு  குறைக்கப்பட்டு, வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார்  ரூ.900 வரை சேமிப்பு ஏற்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்  1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி  திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 20.70 இலட்சம் குழந்தைகள்  பயனடைந்து வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள்  உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு  பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

5 lakh students are benefited every month through pudhumai pen  scheme

இதன்மூலம்  தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.  இத்திட்டத்தில் மாணவர்களும் பயன்பெறும் வகையில் அரசு பள்ளி மற்றும் அரசு  உதவிபெறும் பள்ளி(தமிழ்வழி கல்வி) படித்த மாணவர்கள் உயர்கல்வி படித்தால்  அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் நடப்பு ஆண்டு  முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி  வருகிறார்.  கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் 1.18 கோடி மகளிர்  பயனடைந்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 64,790 குடும்ப அட்டைகள் உள்ளன.

அதில் 48,299 பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்  பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள்  விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில்  குடிசைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில்  8.00 இலட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது.

அதில் நடப்பு ஆண்டில் ஒரு  லட்சம் வீடுகள் கட்டி வழங்கப்படவுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் ஏற்கனவே  தொகுப்பு வீடுகள் திட்டத்தில் கட்டப்பட்ட 2.5 இலட்சம் பழைய வீடுகளை பழுது பார்த்து வழங்குவதற்காக ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வீடுகள் கட்டுவதற்கு கட்டுமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓட்டு வீடுகளை பழுதுபார்க்க ரூ.50,000,  கான்கிரீட் வீடுகளை பழுதுவார்க் ரூ.1.50 இலட்சம் வழக்கப்படுகிறது.  ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டம் 2,200 வீடுகள்  பழுதுபார்க்கப்படவுள்ளது. அந்தவகையில், முதலமைச்சர் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாவது தொகுப்பை இன்றைய தினம் அரியலூர்  மாவட்டத்தில் தொடங்கி வைத்துள்ளார்கள்.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 472 வீடுகளுடன் அடுக்குமாடி  குடியிருப்பு ரூ.51.00 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சியில் 432  வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.42.00 கோடி மதிப்பீட்டிலும்  கட்டப்படவுள்ளன. ஒட்டன்சத்திரம் – கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் ஒரு கல்லூரி, ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கையில் பழனி அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் சார்பில் ஒரு பெண்கள் கல்லூரி,  விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு கல்வி  நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரத்தில் பெண்கள் கல்லூரி  கட்ட ரூ.25.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதற்காக மதுரை, கோயம்புத்தூர்,  சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று பயிற்சி பெற வேண்டிய நிலையை  மாற்றி காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு போட்டித்தேர்வு பயிற்சி  மையம் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் குளிர்சாதன வசதியுடன்  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கடந்த  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வில்(தொகுதி 4) சுமார் 7 மாணவ, மாணவிகள்  நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். தட்டச்சர் பணிக்கு ஒருவர் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு தொகுதி 1 மற்றும்  தொகுதி 2 ஆகிய தேர்வுகளில் தலா 2 பேர் முதல்நிலை தேர்வில் தகுதி  பெற்றுள்ளனர். மேலும், மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டித்  தேர்வுக்கும் விரைவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும்,  பயிற்சி அளிக்கவும் தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு  மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம்  அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் ஆகிய  பகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 77 கிராம ஊராட்சிகள்,  ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனூர் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு  காவிரி குடிநீர் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று  வருகிறது. 

வரும் மார்ச் மாதத்திற்குள் இந்தப்பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு  கொண்டுவரப்படும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அடுத்த 30  ஆண்டுகளுக்கு இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சனை இருக்காது. குடிநீர் குழாயை  எப்போது திறந்தாலும் தண்ணீர் வரும் வகையில் எதிர்கால குடிநீர்  பயன்பாட்டையும் கருத்தில்கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.   முதலமைச்சர் “நம்ம ஊரு சூப்பரு” என்று கூறி சுற்றுப்புறத்தை  தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள். எனவே,  அனைத்து ஊராட்சிகளிலும் சுகாதாரத்தை பேணிகாக்க உள்ளாட்சி அமைப்பு  பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து  செயல்பட்டு, சுகாதாரமான ஊராட்சியாக மாற்றிட வேண்டும். முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ஆண்டுக்கு 10,000 கி.மீட்டர் நீளம் சாலைகளை  மேம்படுத்தும் வகையில் ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம்  20,000 கி.மீட்டர் நீளம் சாலைகள் ரூ.8,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கள்ளிமந்தையம் ஊராட்சியில்  மட்டும் கடந்த 42 மாத ஆட்சிகாலத்தில் ரூ.48.00 கோடி மதிப்பீட்டில் 924 பணிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. கள்ளிமந்தையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.31.00 இலட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட கள்ளிமந்தையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய  குடியிருப்பு கட்டடம், அலுவலக அறை, காத்திருப்பு அறை, சமையலறை,  உணவருந்தும் அறை, படுக்கை அறை, ஆழ்துளைக்கிணறு மற்றும் கழிப்பறை  வசதிகளுடன் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும்,  கள்ளிமந்தையம் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலும்,  நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் கள்ளிமந்தையம் ஊராட்சி –  ஒட்டன்சத்திரம் - தாராபுரம் சாலையிலிருந்து தொப்பக்காவலசு சாலை தரம்  உயர்துதல் ரூ.3.76 கோடி மதிப்பீட்டிலும், தும்மிச்சிபாளையம் – கருப்பத்தேவன்பட்டி சாலை தரம் உயர்த்துதல் ரூ.2.93 கோடி மதிப்பீட்டிலும்,  ஈசக்காம்பட்டி பயணிகள் நிழற்குடையிலிருந்து தும்மிச்சிபாளையம்,  பில்லாக்காட்டு வலசு இணைப்பு சாலை தரம் உயர்த்துதல் ரூ.2.23 கோடி  மதிப்பீட்டிலும், தாளையூத்து கள்ளிமந்தையம் சாலையிலிருந்து கருப்பத்தேவன்பட்டி செல்லும் சாலை ரூ.3.68 கோடி மதிப்பீட்டிலும் மற்றும்  கரியாம்பட்டி ஊராட்சி – கள்ளிமந்தையம் கூத்தம்பூண்டி சாலையிலிருந்து  ரெங்கபாளையம் சாலை தரம் உயர்த்துதல் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலும் என  ஆகமொத்தம் ரூ.14.24 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்ள  இன்று(15.11.2024)  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

ஏழையின் சிரிப்பிலே இறைவன்  என்று பேரறிஞர் அண்ணா சொன்னார்கள். அந்த வகையில் தந்தை பெரியார்,  பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோர் வழியில் முதலமைச்சர் ஜாதி, மதம், கட்சி வேறுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம்  என்ற வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளும் சீரான வளர்ச்சி பெற வேண்டும்  என்ற வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள்,  விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும்  பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற  திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சர் கரத்தை வலுப்படுத்த  என்றென்றும் ஆதரவாக, உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்