Skip to main content

ஜெகன் மோகன்? சந்திரபாபு நாயுடு?; ஆந்திராவில் கள நிலவரம் என்ன?

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Jagan Mohan Reddy to lose power in andhra pradesh

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இதில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. இதில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலங்களில் பதிவான வாக்குகள் ஜூன் 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதே போல், சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.

நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை பிடித்தே தீர வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வந்தன. 

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்து போட்டியிட்டது. மக்களவைத் தேர்தலை பொறுத்துவரை பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம்  17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட்டது. 175 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 88 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் அரசியல் கட்சியினர் போட்டியிட்டனர். அதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 10 இடங்களிலும் போட்டியிட்டது.

இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மை தேவையான இடங்களை விட அதிகமான இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி 116 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியில் கூட்டணியில் உள்ள ஜனசேனா 17 இடங்களிலும், பா.ஜ.க. 7 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன. அங்கு ஆட்சியில் இருக்கும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 22 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆந்திரா மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை பா.ஜ.க கூட்டணி 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

மக்களவை சபாநாயகர் பதவி?; சந்திரபாபு நாயுடு கூறிய முக்கிய தகவல்

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
 Important information given by Chandrababu Naidu for Lok Sabha Speaker post?

ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தல் பரப்புரையில், அதிக பெரும்பான்மையாக 400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க தொடர்ந்து கூறி வந்தது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் பா.ஜ.கவுக்கு பெரும் ஏமாற்றத்தைப் பெற்றுத் தந்தது. 

543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இதற்கிடையில், பா.ஜ.கவுக்கு ஆதரவளித்த தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்,  பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாகத் தகவல் வெளியானது. அதில், மூன்றுக்கும் மேற்பட்ட கேபினட் அமைச்சர்கள் பதவியைத் தெலுங்கு தேசம் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாகவும் தகவல் வெளியானது. அதே போல், ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒதுக்க வேண்டும் என்றும், சபாநாயகர் பதவி தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் எதிர்பார்ப்பதாகத் தகவல் வெளியானது. 

இதனிடையே, மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இன்று (24-06-24) தொடங்கிய மக்களவைக் கூட்டத்தொடர் ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று மக்களவை தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். அதேவேளையில் மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கான தங்களில் நிலைப்பாடு என்ன என்பதைத் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய சந்திரபாபு நாயுடு, “மக்களவை சபாநாயகர் தேர்தலுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடன் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து அமித்ஷா என்னிடம் பேசினார்.

ஆனால், அதற்கு நான் தெலுங்கு தேசம் கட்சிக்குச் சபாநாயகர் பதவி தேவையில்லை, அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன். மாநிலம், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பல உதவிகளைச் செய்யுமாறும் கூறினேன். ஆந்திரா மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியைக் கொடுத்துள்ளனர். அதனால், மேலும் பதவி கேட்டால் மாநில நலன் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்” என்று கூறினார். முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க பரிந்துரைக்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகம்; ஆந்திராவில் பரபரப்பு

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
bulldozed YSR Congress office in Andhra Pradesh

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து தெலுங்கு தேசம் கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான ஜன சேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக கடந்த 12ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம், ஆந்திரப் பிரதேசத்தில் 4வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இதற்கிடையில், குண்டூர் மாவட்டம் தடேபள்ளியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கட்டப்பட்டு வந்தது. இந்த அலுவலகம் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை இடிக்க தடை விதித்து உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (22-06-24) காலை 5 மணி அளவில், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அலுவலகத்தை ராட்சத பொக்லைன் எந்திரங்களை கொண்டு இடித்தனர். இந்த நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “ஆந்திராவில் அரசியல் கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் சந்திரபாபு தனது பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரி புல்டோசர் மூலம் அழித்துள்ளார். இந்த ஐந்தாண்டு கால ஆட்சி எப்படி இருக்கப்போகிறது என்ற வன்முறை செய்தியை இந்தச் சம்பவத்தின் மூலம் கொடுத்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள், இந்த வன்முறைச் செயல்கள் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இல்லை. மக்களுக்காகக் கடுமையாகப் போராடுவோம். சந்திரபாபுவின் இச்செயல்களைக் கண்டிக்குமாறு நாட்டின் அனைத்து ஜனநாயகவாதிகளையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.