
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் நேற்றுடன் (13.05.2025) நிறைவடைந்தது. இதனையடுத்து அவர் ஒய்வு பெற்றார். இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, மூத்த நீதிபதி பி.ஆர். கவாயை (பூஷன் ராமகிருஷ்ண கவாய்) தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா முறைப்படி கடந்த மாதம் முன்மொழிந்தார். இந்த நியமன நடைமுறையின் ஒரு பகுதியாக இது தொடர்பான பரிந்துரை மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் நீதிபதி கவாய், உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக அதிகாரப்பூர்வமாக இன்று (14.05.2025) பதவி ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நீதிபதி கவாய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் இதில் கலந்து கொண்டனர். முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிற முக்கிய பிரமுகர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் வரவேற்றார்.
தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட கவாய், தேர்தல் நிதி பத்திரம் தொடர்பான வழக்கு, புல்டோசரை கொண்டு வீடுகளை இடித்தது தொடர்பான வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. சமுகத்திற்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதே போன்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரை விடுதலை செய்த வழக்கு, பண மதிப்பிழப்பு செய்தது தொடர்பான வழக்கு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 பிரிவை ரத்து செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதே போன்று நீதித்துறை குறித்து அவதூறு கருத்து தெரிவித்தற்காக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்தது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் தடை செய்யப்பட்ட தண்டனை தொடர்பான வழக்கு தமிழகத்தில் வன்னியர் சமுகத்திற்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஆகியவற்றிலும் நீதிபதி கவாய் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் கடந்த 1960ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி காவாய் பிறந்தார். கடந்த 2000ஆம் ஆண்டு நாக்பூர் நீதிமன்ற அமர்வின் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் 2003ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.

அதனைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியானார். மும்பையில் உள்ள முதன்மை இருக்கையிலும், நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் நிதிபதியாக தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார். இவர் வரும் நவம்பர் 23ஆம் தேதியுடன்(23.11.2025) ஓய்வு பெற உள்ளார்.