Skip to main content

சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020

 

ramadoss


சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன எனக் கூறியுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. கரோனா பாதிப்பு மிகவும் தாமதமாகக் கண்டறியப்பட்டது தான் உயிரிழப்புகளுக்குக் காரணம் என்று வல்லுனர்கள் கூறியுள்ள நிலையில், நோய்த்தொற்று முற்றுவதற்கு முன்பாகவே, அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை தொடங்குவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.

கரோனா வைரஸ் நோய்த் தாக்குதலால் தமிழ்நாட்டில் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 167 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமி அடுத்த 4 மணி நேரத்தில் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அதுமட்டுமின்றி கடந்த வாரம் வரை 0.67% ஆக இருந்து வந்த உயிரிழப்பு விகிதம், இப்போது 0.80% ஆக அதிகரித்திருக்கிறது. இந்திய சராசரியுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு என்றாலும் கூட, தமிழகத்தின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது நமக்கு கூடுதல் எச்சரிக்கை தேவை என்பதை உணர்த்துகிறது.

சென்னையில் உயிரிழப்புகள் அதிகரித்திருப்பதற்குக் காரணம் நோய்ப் பாதிப்புகள் மிகவும் தாமதமாகக் கண்டுபிடிக்கப்படுவது தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர். நேற்று உயிரிழந்த 17 வயது சிறுமி தான் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தவர்களில் மிகக்குறைந்த வயதுடையவர் ஆவார். அவருக்கு முதல் வகை நீரிழிவு நோய் உள்ளிட்ட சில குறைபாடுகள் இருந்தாலும் கூட, அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை முன்கூட்டியே கண்டுபிடித்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்பது தான் மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை  உடனடியாகக் கண்டுபிடித்து சிகிச்சையளிக்க வேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.
 

 


தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை விரைவாகக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தான் ஒரே தீர்வாகும். தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே இதைப் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; மருத்துவ வல்லுனர்களும் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதை உணர்ந்து தமிழக அரசு கடந்த சில நாட்களாக சென்னையில் கரோனா சோதனைகளை  அதிகரித்திருக்கிறது. கடந்த 2 ஆம் தேதி 11,094 சோதனைகளும் 3 ஆம் தேதி 14,101 சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில், நேற்று 16,447 சோதனைகளை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதாக தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவே முதலமைச்சர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த எண்ணிக்கை இப்போது சற்றுக் கூடுதலாகியிருக்கக் கூடும். அவர்களை விரைந்து கண்டுபிடித்து மருத்துவம் அளிக்க வேண்டுமானால், சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 10 ஆயிரம் பேராவது ஒரு நாளைக்குக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது 74 ஆய்வகங்கள் உள்ள நிலையில், அவற்றில் தினமும் அதிகபட்சமாக 30,000 சளி மாதிரிகளை ஆய்வு செய்ய முடியும். நேற்றைய நிலவரப்படி ஆய்வுகளின் எண்ணிக்கையை 16,447 ஆக அதிகரித்துள்ள தமிழக அரசு, படிப்படியாக முழுத்திறனையும் எட்டுவதற்கு முன்வர வேண்டும்.
 

corona


அவ்வாறு செய்வதன் மூலம் அடுத்த சில நாட்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட பல மடங்கு அதிகரிக்கும் என்றாலும் கூட, அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்ப் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி விட முடியும்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது முழுக்க முழுக்க அரசின் கடமை என்று நினைத்து பொதுமக்கள் ஒதுங்கி இருந்துவிடக் கூடாது. கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்கள் தான் என்பதால், அவர்கள் தான் அரசின் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மிகச்சிறிய அளவில் நோய் அறிகுறிகள் இருந்தால் கூட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று கரோனா ஆய்வு செய்து கொள்ள வேண்டும்; அதேபோல், நோய்ப்பாதித்த பகுதிகளில் உள்ளவர்கள் தாங்களாக முன்வந்து ஆய்வு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை தொடங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்படுவது உறுதி செய்யப்படுகிறது; அதுமட்டுமின்றி, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவுவதும் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படுகிறது.
 

http://onelink.to/nknapp


எனவே, தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளைப் படிப்படியாக 30 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகபட்சமாக ஒரு சில நாட்களில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு சென்னையின் அனைத்துப் பகுதிகளில் வாழும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.