Skip to main content

நாட்டிலேயே முதல்முறையாக; இன்று முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த மாநிலம்!

Published on 27/01/2025 | Edited on 27/01/2025
 Common Civil Code to be implemented today in uttarkhand For the first time in the country

இந்தியா சுதந்திரம் அடைந்தது முதலே விவாதிக்கப்பட்டு வரும் சட்டமான, பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பும், ஒரு தரப்பினரின் ஆதரவும் நிலவி வருகிறது. இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினர், பொது சிவில் சட்டத்தை தங்களது உரிமைகளைப் பறிக்கும் ஒன்றாகவே கருதுகிறார்கள். இந்த பொது சிவில் சட்டத்தை திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, குழந்தைகளைத் தத்தெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தனி நபர் உரிமைகள் தொடர்பாக அந்த நபர்களின் மதத்திற்கு ஏற்ப இயற்றப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், நாட்டில் முதல் முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று (27-01-25) பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. புஷ்கர் சிங் தாமி கடந்த 2022ஆம் ஆண்டு மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற போது உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து, மாநிலத்தில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில், பொது சிவில் சட்ட மசோதாவை தயாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர், பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு மசோதாவை தயார் செய்து முதல்வரிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்தனர். இந்த வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதனையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக கடந்தாண்டு பிப்ரவரி மாதம், உத்தரகாண்ட் சட்டசபையில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி செய்தார். இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், 3 நாள் விவாதத்துக்குப் பின் கடும் எதிர்ப்பையும் மீறி ஆளும் பா.ஜ.க அரசு உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்ட மசோதா கடந்தாண்டு பிப்ரவரி 7ஆம் தேதி நிறைவேற்றியது. இதன் மூலம், நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில், நாட்டில் முதல்முறையாக உத்தரகாண்டில் இன்று (27-01-25) முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவிக்கையில், “இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளுக்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் முடித்துள்ளது. இந்தச் சட்டம் சமூகத்தில் சீரான தன்மையைக் கொண்டுவரும். அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள் மற்றும் பொறுப்புகளை உறுதி செய்யும் என்பதே இந்தச் சட்டத்திற்கான காரணம். நாட்டை ஒரு வளர்ந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, இணக்கமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்றுவதற்காக பிரதமர் நடத்தும் மாபெரும் யாகத்தில் நமது மாநிலம் இந்த சட்டத்தை அமல்படுத்தப்படுவது ஒரு பிரசாதம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. மறுமணம், விவாகரத்து குறித்து பொது விதிகளை அமல்படுத்தியது. திருமணங்களை போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோர், மாநில அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டது. அப்படி பதிவு செய்யத் தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, திருமணம் செய்யத் தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்/மகள் ( அத்தை மகன்/மகள்) மற்றும் தாய் சகோதரரின் மகன்/மகள் (தாய்மாமன் மகன்/மகள்) என்ற உறவுமுறையும் இடம்பெற்றது. இந்த உறவு முறையில் திருமணம் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது என்று குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்