Skip to main content

CAA, NRC, NPRக்கு எதிராக ம.ஜ.க. மாநாடு... பாஜகவை மிரள வைத்த தமிமுன் அன்சாரி 

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

 

 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான  "வாழ்வுரிமை மாநாடு" பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது.

 

Coimbatore




இந்த மாநாடு நடைபெற்ற கொடிசியா திடலுக்கு காந்திஜி அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருந்தது. டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் கடும் குளிரில் உயிர் துறந்த குழந்தை ஜஹானாராவின் பெயர் மாநாட்டு மேடைக்கு வைக்கப்பட்டிருந்தது. சச்சார் கமிட்டியின் தலைவராக இருந்து இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நீதியரசர் சச்சார் அவர்களின் பெயர் பிரதான நுழைவாயிலுக்கும், பயங்கரவாத சூழ்ச்சிக்கு பலியான மராட்டிய DGP ஹேமந்த் கர்கரேவின் பெயர் மற்றொரு நுழைவாயிலுக்கும் சூட்டப்பட்டிருந்தது. பெண்கள் நுழைவாயிலுக்கு, காஷ்மீரில் பாலியல் பலாத்காரத்தால் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபாவின் பெயரும், கண்காட்சி பகுதிக்கு ரோஹித் வெமுலாவின் பெயரும் வைக்கப்பட்டிருந்தது.

 

அது போல் பயங்கரவாதத்திற்கு பலியான பிரபல முற்போக்கு எழுத்தாளர் கெளரி லங்கேஷ் அவர்களின் பெயர் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டிருந்தது. காலம் சென்ற கோவை மஜக வின் நிர்வாகி ஜெமிஷா அவர்களின் பெயரும் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டிருக்கிறது.
 

இந்து, முஸ்லிம், கிரித்தவ, சீக்கிய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சிரிக்கும் படங்களுடன் "இந்தியாவின் ஒருமைப்பாட்டை பாதுகாப்போம்" என்ற 80 அடி நீள பேனர் மேடையின் முன்பகுதியில் தொங்க விடப்பட்டது. அது காண்போரை பரவசப்படுத்தியது.


 

அது போல் திடலுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்களில், பூலித்தேவர், திப்பு சுல்தான், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள்  போன்ற மன்னர்களின் தியாகங்களும், காந்தி, அம்பேத்கார், பசும்பொன் தேவர், காமராஜர், காயிதே மில்லத் போன்றோரின் கருத்துகளும் படங்களுடன் வரையப்பட்டிருந்தது.
 

இந்நிகழ்வில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கோனிகா பஷீர் ஹாஜியார், வடபழனி இமாம் தர்வேஸ் ரஷாதி, சமூக சேவகர் அப்பல்லோ ஹனீபா, தேவர் சமுதாய பிரமுகர் சரவணன், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப் படை மற்றும் விசிக பிரமுகர்களும் மேடையில் அமர்ந்திருந்தனர். 

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா Ex. MP, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாமன்னர் திப்பு சுல்தானின் கொள்ளுப்பேரன் பக்தியார் அலி சாஹிப், பாதிரியார் ஜெகத் கஸ்பர், மஜக அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுசெயலாளர் ஜே.எஸ்.ரிபாயி,  அலிகார் பல்கலைகழக மாணவர் பேரவை செயலாளர் ஹுசைவா அமீர் ரஷாதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், AMU மாணவர் பேரவை  உறுப்பினர் கௌதம், குலிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் முக்தார் அஹமது, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன்  உள்ளிட்டோர் உரையாற்றினர்.

 

Coimbatore


 

இரவு 8 மணியளவில் மாநாட்டு திடலில் அமர்ந்து இருந்த அனைத்து மக்களும் எழுந்து தங்களது செல்போன் விளக்குகளை ஒளிரவிட்டு டெல்லியில் கலவரத்தால் கொல்லப்பட்ட மக்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வு காண்போர் அனைவரையும் உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தியது. எங்கும் ஒளிமயமாய் உருக்கமாக மாறியது. மேடையின் பின்புறம் இருந்த பிரம்மாண்ட டிஜிட்டல் திரை இதை ஒளிபரப்பிய போது அதன் பிரம்மாண்டம் மிரள வைத்தது எனலாம். தென்னிந்தியாவில் ஒரே இடத்தில் இது போன்ற ஒளி வழி எதிர்ப்பு திரட்டப்பட்டது இங்கு தான் என பலரும் குறிப்பிட்டனர். 

 

Coimbatore



டிசம்பர் 12 அன்று தமிழகத்தில் முதன் முறையாக குடியுரிமை சட்டத்திற்கு  எதிராக மஜக தான் பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நகல் கிழிப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தது. அதன் பிறகு பேரணிகள், ஆர்ப்பாட்டம் மண்டல, மாவட்ட கூட்டங்கள் என பலரும் இதை வலிமைப்படுத்தினர். ஆனால் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக முதல் முதலாக மாநாடு நடத்தி அரிய கள சாதனையை உற்சாகமாக செய்து மஜக முடித்திருக்கிறது என பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தன் உரையில் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில்  17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் நன்றி கூற, தேசிய கீதத்துடன் மாநாடு நிறைவுற்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.