Skip to main content

மருது பாண்டியரை தூக்கில்போட்ட போது கதவைப் பூட்டிக்கொண்ட மக்கள் - வெள்ளைக்காரன் பதிவு செய்த வரலாறு  

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

marudhu brothers

 

கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களின் கதையாசிரியரும் எழுத்தாளருமான ரத்னகுமார், இந்திய சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், மருது பாண்டியரை தூக்கிலிட்ட சம்பவம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

வேலூர் சிப்பாய் கலகம்தான் இந்த மண்ணில் ஏற்பட்ட முதல் மக்கள் புரட்சி. அதற்கு முன்புவரை மன்னர்கள்தான் வெள்ளையரை எதிர்த்து சண்டை போட்டுக்கொண்டு இருந்தார்கள். எந்த மன்னன் இறந்தாலும் மக்கள் பெரிய அளவில் வெகுண்டெழுந்ததாகவோ, வருத்தப்பட்டதாகவோ செய்திகள் இல்லை. தென்பகுதி மட்டும் அதில் கொஞ்சம் விதிவிலக்கு. மன்னர்கள் மக்களிடம் நடந்துகொண்ட முறை அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால், மக்கள் விஷயத்தில் வெள்ளைக்காரன் ரொம்பவும் கவனமாக இருந்தான். மன்னர்கள், புரட்சிக்காரர்கள், தலைவர்களைத்தான் கொல்ல வேண்டுமேயொழிய மக்களைத் தொடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

 

விவசாயம் செய்வது, துணி விற்பது, வாணிபம் செய்வது உள்ளிட்ட எல்லா வேலைகளுக்கும் ஆள் வேண்டும். அதற்கு மக்கள் முக்கியம் என்பதை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான். மக்கள் இல்லாத நாடு சுடுகாடு என்பதுதான் வெள்ளிக்காரனின் புரிதல். அதனால் மக்களை அவன் தொந்தரவே செய்யவில்லை. இந்தியாவை முழுக்க கைப்பற்றியவுடன், நாங்கள் ஆட்சியை கைப்பற்றிவிட்டோம். எங்களுக்கான வரியை நீங்கள் கட்டிவிட்டால் உங்களின் மரியாதையும் உரிமையும் பாதுகாக்கப்படும் என ஒரு அறிக்கை விட்டான். அதை ஏற்றுக்கொண்டு மக்கள் வரியை கட்டிக்கொண்டே இருந்தார்கள். 

 

மன்னர்கள் இறந்தபோது மக்கள் பெரிய அளவில் வருத்தப்படாததற்கு ஒரு உதாரணத்தை கூறுகிறேன். மருது பாண்டியரை தூக்கில் போட்டபோது பல பேர் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்கள். திருப்பத்தூர் கோட்டையில் ஒரே நாளில் 500 பேரை தூக்கில் போட்டிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை பற்றி எழுதியுள்ள வெள்ளிக்காரன், அவர்களை தூக்கில் போடும்போது மக்கள் ஒருவர்கூட வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதுதான் மருது பாண்டியர்களுக்கு கிடைத்த செல்வாக்கு என்று எழுதியிருக்கிறான்.