Skip to main content

குருமூர்த்திகள் தான் நமக்கான வேலையைக் கொடுப்பவர்கள்... தொடர்ந்து போராடுவோம் - போஸ் வெங்கட் பேச்சு!

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

fh

 

சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திரைப்பட நடிகர் போஸ் வெங்கட் மற்றும் கரு.பழனியப்பனுக்கு விருது வழங்கப்பட்டது.

 

விருதைப் பெற்ற போஸ் வெங்கட் பேசியதாவது, "அனைவருக்கும் இந்த நேரத்தில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 20 நிமிடங்கள் பேச அனுமதி அளித்துள்ளார்கள். ஆனால் நான் 10 நிமிடம் மட்டுமே பேசுகிறேன். மீதி நேரத்தை நண்பர் கரு.பழனியப்பன் சேர்த்துப் பேசட்டும். எவ்வளவு மேடை ஏறி பேசினாலும் எப்போதும் ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்யும். அதுவும் இந்த மேடையில் இன்னும் அதிகமாக இருக்கிறது. சிறிது நேரம் பேச்சு வராது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 'கன்னி மாடம்' படத்தை முதன் முதலில் பிரிவிவ் காட்சிகள் போட்டிருந்தோம்.

 

நிறைய பேரை கூப்பிட்டு இருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை. தியேட்டர் காலியாக இருந்தது. ஒரு 14 ஆயிரம் பணம் கட்ட வேண்டும். கட்டிவிட்டுக் காத்திருந்தோம், ஆனால் யாரும் வரவில்லை. அது ஒரு கவனிக்கப்படாத திரைப்படமாகப் போயிருக்கும். என் உழைப்பு வெளியே தெரியாமல் போயிருக்கக் கூட வாய்ப்பு இருந்தது. அந்த நேரத்தில் இந்த திரைப்படத்தை வெளியே காட்டியதில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் ஆசிரியர் வீரமணி. அப்போதே பல முறை நான் நன்றி சொல்லி இருக்கலாம். ஆனால் அது சரியாக இருந்திருக்காது. தற்போது கூறுவதுதான் சரியாக இருக்கும், நன்றி ஐயா.

 

அதே போல அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் படம் பார்த்த பிறகுதான் இது படமாக வெளியே தெரிந்தது. நல்லது வெளியே தெரிவதற்கு சில பேர் வேண்டும் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அதற்கு இந்த கன்னி மாடம் படமே சிறந்த உதாரணம். தற்போது என்னுடைய பதட்டம் சற்று குறைந்துள்ளது. இந்த விருதை கரு.பழனியப்பன் உடன் சேர்ந்து வாங்குவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தச் சூழ்நிலையில், போஸ் வெங்கட்டுக்கு நிறைய பெரிய நடிகர்கள் எல்லாம் தெரியுமே, அவர்களை வைத்து பெரிய கமர்ஷியல் திரைப்படத்தை எடுத்திருக்கலாமே என்று என்னை ஒரு பைத்தியக்காரனை போல் பார்த்தவர்கள் என் அருகிலேயே இருந்தார்கள். அதுதான் உண்மையும் கூட. 

 

எனக்குப் பெரியாருடைய மொழியே ரொம்ப லேட்டாகத்தான் புரிந்துகொள்ள முடிந்தது. நான் பல வேலைகள் பார்த்த போது அந்த மொழி எனக்கு இயல்பாகவே புரியவந்தது. அதுதான் உண்மையும் கூட. என் தகப்பனார் தற்போது இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் அவர் இல்லை, பெரியாரை எனக்குள் ஊட்டி வளர்த்தவர் என்னுடைய தந்தை. ஒரு விஷயத்தை நடத்திக்காட்டுகின்ற வரையில் நாம் யார் என்று யாருக்கும் தெரியாது. நான் பெரியாரால் வளர்க்கப்பட்டவன் என்பதை தெரியப்படுத்தும் விதமாக இந்தத் திரைப்படம் இருந்தது என்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. இந்த குருமூர்த்திகள்தான் நமக்கு இன்னமும் இங்கே வேலை இருக்கிறது, எங்கேயும் சென்றுவிடாதீர்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். நாங்களும் செல்லத் தயாரில்லை. ஒருகை பார்க்கத் தயாராகிவிட்டோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.