Skip to main content

தமிழ் மொழியை எப்படி அழிக்க முடியும்? வானதி சீனிவாசன் கேள்வி 

Published on 02/03/2018 | Edited on 03/03/2018

தமிழ் மொழியை எப்படி அழிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.
நக்கீரன் இணையதளத்திற்கு வானதி சீனிவாசன் அளித்த சிறப்பு பேட்டி:-

Vanathi Srinivasan



தி.மு.க.வை அழிக்க பா.ஜ.க. வஞ்சக திட்டம் தீட்டிவருகிறது. திராவிட இயக்கத்தை வேரோடு அழிக்க பார்க்கிறது. திராவிடத்தை வெல்ல எந்த முயற்சிக்கும், எந்த வித சக்திகளுக்கும் அனுமதி தர மாட்டோம் என வைகோ கூறியிருக்கிறாரே?
வைகோ அவர்களுக்கும், திராவிடத்தின் பெயரால் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கும் பாஜகவின் தாக்கம் என்பது தமிழகத்தில் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால் அரசியல் சூழல் என்பது தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஆதரவு, பாஜக எதிர்ப்பு என்று பாஜக ஒரு மையப்புள்ளிக்கு வரக்கூடிய சூழலுக்கு மாறிக்கொண்டிருக்கிறது. பாஜகவின் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கலாம். ஆனால் வரக்கூடிய காலத்தில் பாஜக வளர்ச்சி என்பதை இவர்களால் ஓரளவு யூகிக்க முடிகிறது. அதனால்தான் வைகோ போன்றவர்கள் திராவிடம் என்ற சொல்லை அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இருக்கக்கூடிய இளைஞர்கள் மொழி, இன அரசியலைப்பற்றி தெளிவான பகுப்பாய்வு செய்யக்கூடியவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இளைஞர் சக்தியை ஈர்க்க முடியாத திமுகவும், மதிமுகவும் திராவிடத்திற்கு ஆபத்து வந்ததுபோல கூக்குரல் எழுப்பிக்கொண்டிருப்பது என்பது அவர்களுக்கு பாஜக மீது உள்ள ஒரு பயத்தை காட்டுகிறது. இதே வைகோ அவர்கள், பாராளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்தார். அப்போது இவர் ஜெயிப்பதற்கு மோடி தேவைப்பட்டார். அந்த தேர்தலின்போது மற்ற கட்சிகளையெல்லாம்கூட பாஜகவின் பக்கம் கொண்டுவருவதற்கு வைகோ உதவி செய்தது ஏன்? அப்போது திராவிட கட்சிகளுக்கு ஆபத்து என்பதை அவர் உணரவில்லையா?

காவிரி பிரச்சினைக்காக தமிழக அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்ட தீர்மானங்களை டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வழங்குவது என்று முடிவு செய்தோம். தமிழக அரசு பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளது. ஆனால் இதுவரையில் நேரம் ஒதுக்கப்படவில்லை. 8 கோடி தமிழர்களை மோடி உதாசினப்படுத்துகிறார் என வைகோ குற்றம் சாட்டுகிறாரே?
காவிரி மேலாண்மை வாரியத்தை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழகத்திற்கு ஆறுதல் அளிக்கக்கூடிய தீர்ப்பு மட்டுமல்ல. இதுநாள் வரை பேப்பர்களிலேயே இருந்து வந்த தீர்ப்பை நிஜமாக்குவதற்கான வாய்ப்பு கூடி வந்திருக்கிறது. இதில் அரசியல் செய்ய நினைக்காமல், இப்போது வந்திருக்கக்கூடிய தீர்ப்பை நல்ல முறையில் எப்படி அமல்படுத்துவது என அனைத்துக் கட்சிகளும் யோசிக்க வேண்டிய நேரம். அங்கிருந்து ஒரு அறிக்கை, இங்கிருந்து ஒரு அறிக்கை என்று அறிக்கை போர் வாசிக்காமல், சற்று காலம் பொறுத்திருந்து நீதிமன்றத்தின் கால அளவுக்குள் நின்று அதற்கு பின்னால் ஆக்கப்பூர்வமாக யோசிப்பது நம்முடைய விவசாயிகளுக்கு பெரும் பலன் கொடுபபதாக இருக்கும்.

பிரதமரை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதுதான் குற்றச்சாட்டு...

நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது. பிரதமரை பார்ப்பதால் மட்டும் இதில் என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும். பார்க்கலாம் அவ்வளவுதான். பிரதமரின் கீழ் உள்ள அரசு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது. அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறது. அதற்கு பின்னால் காலதாமதம் ஆகும்போது பிரதமரை சந்திப்பது என்பது இயல்பானது. இந்த விசயத்தை பொறுத்தவரையில் தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக அணுகிக்கொண்டிருக்கிறார்கள். ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல நேரம். அதே நேரத்தில் கொஞ்சம் பொறுமையும் காத்தால் நமக்கான நீதி நிச்சயம் வந்து சேரும்.

ஆன்மீக அரசியல் என்று ரஜினி பூச்சாண்டி காட்டுகிறார். பா.ஜனதா கொடுக்கும் அழுத்தத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறாரே?

தமிழகத்தில் எது நடந்தாலும் மோடியும், பாஜகவும் காரணம் என்று சொல்லக் கூடிய சூழல் இப்போது வந்துவிட்டது. அதனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. கோரஸ் பாடும்போது, அவர் மட்டும் தனியாக நின்றால் நன்றாக இருக்காது. அதனால் அதில் அவரும் சேர்ந்துவிட்டார்.

திராவிட கட்சிகளை தேசிய கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் தமிழகம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு திராவிட கட்சிகள்தான் காரணம். தமிழ் மீது பற்று இருப்பதாக சொல்லிவிட்டு தமிழை அழிக்க அத்தனை முயற்சிகளையும் தேசிய கட்சிகள் செய்கின்றன. இந்திதான் ஆட்சி மொழி, இந்தி பேசு என்கிறார்கள். தமிழை அழிக்க நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என அதிமுக எம்பி தம்பிதுரை பேசியிருக்கிறாரே?

கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஏன் தமிழை வளர்க்கவில்லை என்று சொன்னால் தம்பிதுரையின் பதில் என்ன. தமிழகத்தில் 50 வருடத்திற்கு முன்பாக இருக்கின்ற தமிழ் இப்போது வளர்ந்திருக்கிறதா? அழிந்திருக்கிறதா? யார் காரணம்? ஒருவேளை அவருடைய குற்றச்சாட்டு உண்மை என்று வைத்துக்கொண்டால்கூட, இப்போது வந்திருக்கின்ற மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியால் தமிழை அழித்துவிட முடியுமா? தமிழ் என்பது சமஸ்கிருதத்தைவிட மூத்த மொழி என்று பிரதமர் மோடி சொல்லியிருக்கிறார்.

தமிழ் மீது பற்று இருப்பதாக சொல்லிவிட்டு தமிழை அழிக்க அத்தனை முயற்சிகளையும் தேசிய கட்சிகள் செய்கின்றன. ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்.
ஐஐடியில் நிச்சயமாக தமிழ்தாய் வாழ்த்து பாடியிருக்க வேண்டும். அந்த நிகழ்ச்சி ஐஐடி நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஆனால் இங்கு நடந்த நிகழ்ச்சிக்கு பிரதமரே நேரடியாக நிகழ்ச்சி நிரல் தயாரித்த மாதிரி பேசினால் என்ன அர்த்தம். திருவள்ளுவரை இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு எடுத்துச் சென்றது பாஜக. பாரதியாரின் பிறந்த நாளை இந்தியா முழுவதும் கொண்டாட செய்தது பாஜக. ஆர்ப்பாட்டம் செய்யாமல், மொழி அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமாக ஒரு மொழியை மதிக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதை வைத்து அரசியல் லாபம் அடைந்த திராவிட கட்சிகள், மொழி மொழி என கூக்குரலிட்டு உண்மையான தமிழ் மொழி வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல், தமிழில் பேசக்கூடிய இளைஞர்களையும் ஊக்கப்படுத்தாமல், தமிழை தங்கிலீஷாக மாற்றக்கூடிய சாதனைத்தான் திராவிடக் கட்சிகள் செய்திருக்கின்றன. ஆக தமிழ் மொழியை காப்பாற்றுவதைப் பற்றியெல்லாம் இனி திராவிடக் கட்சிகள் பேசவேக் கூடாது. அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் தமிழ் மீடியத்தில் படிக்கின்ற வகுப்புகளையெல்லாம், மூடப்பட்டு வரக்கூடிய சூழலை ஏற்படுத்தியவர்கள், தமிழ் மொழி காவலர்களைப்போல மக்களை இனிமேலும் வேஷம்போட்டு ஏமாற்ற வேண்டாம். இவ்வாறு கூறினார்.