சசிகலா எழுச்சியை, அந்த அதிமுக பிரமுகரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனை, அதிமுக தலைவர்கள் மட்டத்திலேயே இல்லை என்று புலம்பினார். ‘கட்சி உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை’ என, அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆதங்கம் இதோ;
வைகோ கட்சி ஆரம்பித்தபோது இதைக்காட்டிலும் பன்மடங்கு எழுச்சி இருந்தது. எம்.ஜி.ஆர். மறைந்து, 1988ல் அவரது மனைவி வி.என்.ஜானகி முதலமைச்சரான பிறகு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மதுரைக்கு வந்தபோது, வழியெங்கும் உள்ள ரயில் நிலையங்களில், தொண்டர்கள் ஆரவார வரவேற்பு அளித்தனர். அதனால், காலையில் வரவேண்டிய ரயில், மாலையில்தான் மதுரை வந்துசேர்ந்தது. 1989ல் அவர் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு பிரச்சாரம் செய்தபோது, அப்படி ஒரு கூட்டம். தனக்காகக் கூடிய கூட்டத்தைப் பார்த்து மலைத்துப்போன வி.என்.ஜானகி, “எப்படியிருக்கு கூட்டம்?” என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டேவிட்டார். தற்போது, சசிகலா தரப்பிலும் ‘மாஸ்’ காட்டியிருக்கின்றனர். அவ்வளவே! இதுபோன்ற கூட்டத்தை வைத்தெல்லாம், அரசியல் தலைவர்களின் எதிர்காலத்தைக் கணித்துவிட முடியாது.
‘அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்..’ என்ற கோஷம், தற்போது சுத்தமாக அடங்கிவிட்டது. வட மாவட்டங்களில், தனி ஒருவனாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். அதுபோல், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ். பிரச்சாரத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே! அவரோ, ‘நல்லவர்; வல்லவர்; விசுவாசம் மிக்கவர்; திறமையானவர்’ என, தன்னை மட்டுமே முன்னிறுத்தி விளம்பரம் வெளிவருவதில், அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார். அவரும்கூட, ‘எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘அம்மாவின் ஆட்சியமைப்போம்’ என்றே பேசி வருகிறார்.
செய்த வினையை எடப்பாடி தற்போது அறுவடை செய்கிறார். தர்மயுத்தம் நடத்திய காலத்தில், நம்பிக்கையோடு தன் பின்னால் வந்தவர்களுக்குப் பதவி கிடைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். நினைத்ததைச் செயல்படுத்தும் இடத்தில் இருந்தார் அவரது ஆதரவாளராக இருந்த கே.பி.முனுசாமி. எடப்பாடி, கே.பி.முனுசாமியை மொத்தமாக தன்பக்கம் இழுத்துவிட, ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு பட்டை நாமம் சாத்தப்பட்டது. ஓ.பி.எஸ்.ஸை நம்பிச் சென்றது வீணென்று தெரிந்ததும், எடப்பாடி ஆதரவாளராகவே இருந்திருக்கலாம் என்ற முணுமுணுப்பு எழுந்து, அது நடந்தும்விட்டது.
இன்னொரு கொடுமையும்கூட நடந்தது. மிகவும் நம்பிக்கைக்கு உரியவர் என்று நினைத்த அந்த சீனியர் விசுவாசி, மா.செ.க்களிலிருந்து, அமைச்சர் வரையிலும் கோடிகளில் கல்லா கட்டியது தெரிந்து ஓ.பி.எஸ். வெறுத்துப்போனார். அவரை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார். ஆட்சியும் கட்சியும் எடப்பாடியின் வசமாகிவிட்ட நிலையில், தாமரை இலைத் தண்ணீராக, ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் ஓ.பி.எஸ்., கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், தனிவழியில் பயணிக்கிறார். சரியான நேரத்தில் காய் நகர்த்துவோம் என்பதே ஓ.பி.எஸ்.ஸின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. அதுவரை அமைதி காப்பார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொதுக்குழுவும் கூட்ட முடியாது. ஆட்களையும் தூக்க முடியாது. கேட்ட சீட் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்றால், ஒத்துழையாமை இயக்கமே நடத்துவார்.
பிப்ரவரி 6-ஆம் தேதி, தலைமைக் கழகத்தில், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், நேரடியாக சசிகலா பெயரைக் குறிப்பிட்டுப் பேசாத ஓ.பி.எஸ். ‘தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களில் கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுமா? ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டால் எப்படி சரிக்கட்டலாம்? வாய்மொழியாகச் சொல்வதற்குத் தயக்கம் இருந்தால், எழுத்துமூலமாகக் கருத்துகளைத் தெரிவியுங்கள்’ என்று கேட்டபோது, தங்களுக்குத் தரப்பட்ட பேப்பரில் யாரும் எழுதித்தரவில்லை. முதல் ஆளாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியேற, அவரைப் பின்தொடர்ந்து அனைவரும் வெளியேறினார்கள். ஓ.பி.எஸ். இவ்வாறு கேட்டுக்கொண்டதும்கூட, ஒரு கண் துடைப்புக்காகத்தான். ஒருவேளை, தேர்தல் முடிவுகள் சாதகமாக வராத நிலையில், ‘கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கட்சியைக் காப்பாற்றி இருக்க வேண்டாமா?’ என்று பின்னாளில் யாராவது கேட்டால், ‘அப்போது சரியாகத்தான் கேட்டேன். நீங்கள்தான் உங்கள் மாவட்ட நிலவரம் அறிந்து பதிலளிக்கவில்லை’ என்று சமாளித்துவிடத்தான்.
நான்கு வருடங்களுக்கு முன் சசிகலா செய்தது, பூமராங்காக திரும்பியிருக்கிறது. அப்போது என்ன நடந்தது? ‘ஆட்சியும் கட்சியும் சின்னம்மாவிடம் இருக்க வேண்டும்..’ என்று ஒவ்வொருவராகப் பேசவைத்தார். அதே பாணியில், சசிகலாவுக்கு எதிரான கருத்துகள், அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் போன்றவர்களின் பேட்டி வாயிலாக தற்போது வெளிப்படுத்தப்படுகிறது. அடுத்து, டெல்டா மாவட்டத்திலும், முக்குலத்தோர் தரப்பிலிருந்து, இதே ரீதியில் சசிகலாவுக்கு எதிராகப் பேசவைக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
திமுகவோ, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதியை பிரச்சாரத்தில் இறக்கிவிட்டுள்ளது. அதிமுக விளம்பர அரசியல் மட்டுமே செய்கிறது. மற்றபடி, சோம்பிக் கிடக்கிறது. இந்த நிலையில், ‘கடந்த நான்கு ஆண்டுகளில், நம்மை எப்படியெல்லாம் எடப்பாடி உதாசீனப்படுத்தி இருக்கிறார். அவருக்குப் பாடம் புகட்டுவதற்காக சசிகலா பக்கம் போனாலும் தப்பில்லை’ என்று ஓ.பி.எஸ்.ஸை உசுப்பேற்றும் ஆதரவாளர்களும் உண்டு.
ஓ.பி.எஸ்.ஸும் ‘ராம பக்தியில் அனுமனை மிஞ்ச உலகில் யாராலும் முடியாது என்று விளக்கி, அனுமன் மீது பொறாமை கொண்ட சீதை, இலக்குவன், பரதன், சத்ருக்கன் நால்வருமே போட்டியிலிருந்து விலகினார்கள்’ என்று ராமாயணக் கதையை, தனக்கு சாதகமாக எடுத்துவிட்டு, விளம்பரமாக வெளியிட்டு வருகிறார். அப்படியென்றால், முதலமைச்சர் போட்டியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலகி, தனக்கு வழிவிட வேண்டுமென்று சூசகமாகச் சொல்கிறாரா? என்ற கேள்வி, இயல்பாகவே எழுகிறது. ‘இது என்ன மாதிரியான அரசியல்?’ என்று எடப்பாடி கடுப்பாகிவிட, அவரைப் பெயரளவுக்கு ‘கூல்’ செய்யும் விதமாக ‘எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா பயணித்த வழியில் சென்று சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார்’ என்று கோவையில் நடைபெற்ற 123 ஜோடி திருமண விழாவில் பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அங்கும்கூட, மீண்டும் எடப்பாடி ஆட்சி என்று குறிப்பிடாமல், ‘மீண்டும் நமது ஆட்சியை நிலைநிறுத்துவதுதான் ஜெயலலிதாவுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும்’ என்று பொடி வைத்தே பேசியிருக்கிறார்.
மாவட்டங்கள் பலவற்றிலும், மாவட்டச் செயலாளர்களை உரசியபடியே எதிர் அரசியல் பண்ணுபவர்கள் உண்டு. அதிமுக ஆளும்கட்சியாக இருந்தாலும், இத்தகையோர் வறட்சியாகவே உள்ளனர். ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பனிப்போர் முடிவுக்கு வந்து, கட்சி உடைந்தால், மாவட்டப் பொறுப்பு தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இவர்களுக்கு உண்டு. இப்படியொரு இக்கட்டான நிலைக்கு கட்சியைக் கொண்டு வந்துவிட்டார்கள், எடப்பாடியும் பன்னீரும். பிறகெப்படி ‘மீண்டும் அம்மா ஆட்சி’ அமையும்?
உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் ஒன்றுமாக, அதிமுகவில் என்னென்னவோ நடக்கிறது!