Skip to main content

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கொடுத்து பழகியவன் தமிழன் - நீட்தேர்வுக்கு எதிராக தமிமுன் அன்சாரி பேச்சு 

Published on 20/04/2018 | Edited on 20/04/2018

உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் - இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் தமிழ்நாடு - புதுச்சேரி மாநிலங்களுக்கான 'நீட்' தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு, சென்னை காமராசர் அரங்கத்தில்  நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கலந்துகொண்டு உரையாற்றினார்.

 Tamimun Ansari speech

 


அன்பு தங்கை அனிதா சட்டமன்ற விடுதியில் பேசுகையில் சொன்னார்கள் நான் நீட் தேர்வு என்னவென்றே தெரியாமல் நான் சென்று தேர்வு எழுதினேன். அது மிகவும் சிரமமாக இருந்தது. இதற்கு முன் இதுபோல் ஒரு தேர்வை நான் எழுதியதில்லை. நான் சிறுவயதாக இருக்கும்பொழுது என் அம்மா உடல்நலம் சரியில்லாமல் இறந்துவிட்டார். அதனால் என் அண்ணன்கள் மருத்துவாராக வேண்டும் என்று என்னை ஊக்கப்படுத்தினார்கள் என்று என்னிடம் வந்து முறையிட்டார்கள். நான் மற்றும் அண்ணன் தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் இணைந்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களை சந்திக்கவைத்தோம். மாண்புமிகு.அம்மா அவர்கள் இருந்தபொழுது கொண்டுவந்த சட்டவரைவை இன்னும் குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் கிடப்பில்போட்டு வைத்துள்ளார்கள். மறுபுறம் 'நீட்' தேர்விற்கு இந்தாண்டு விதிவிலக்கு  கிடைக்கும்  என்ற நம்பிக்கையில் நம்  தமிழ் சகோதர, சகோதரிகள் ,மாணவ,மாணவிகள் தவம் செய்துகொண்டிருக்கிறார்கள். மத்திய அரசிடம் மன்றாடி இந்த வருடமாவது நீட் தேர்வின் விதிவிலக்கை பெற்றுத்தரவேண்டும் என்று நாங்களெல்லாம் வாதாடினோம்.


டெல்லிக்கு அன்புத் தங்கை அனிதாவை அனுப்புவதற்கான முன் முயற்சியோடு நாங்கள் அனைவரும் திரைக்கு பின்னால் நம்பிக்கையோடும், எதிர்பார்போடும் பணியாற்றி காத்திருந்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை.அதனால் அன்புத்தங்கை அனிதா தன்னையே தியாகம் ஆக்கிக்கொண்டாள். அந்த தியாகம் டெல்லியின் காதுகளுக்கோ, கதவுகளுக்கோ கேட்கவில்லை. இதுதான் உதாரணம் வழக்கம்போல் டெல்லி தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டது என்பதற்கு. இதில் வேதனையான செய்தி என்ன தெரியுமா நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை, நீட் தேர்வுக்கு  எதிரான, சித்தாந்த ரீதியான செயல்பாடு என்று இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலமும் இல்லை. ஏன் நம் அருமைக்குரிய இடதுசாரிகள் ஆளுகின்ற கேரளாவிலும் இல்லை. தமிழ்நாட்டில் இருக்க காரணம் தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான். தந்தை பெரியார் அவர்கள் மட்டும் இந்தி பேசும் மாநிலத்தில் பிறந்திருந்தால் அவரின் கருத்துக்கள் இந்தியா முழுவதும் பரவியிருக்கும். 

தந்தை பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் நீட் தேர்வை எதிர்த்து அதற்கான போராட்டங்கள் இன்றும் பல வடிவங்களில் நடைபெற்று வருகின்றது. தற்போது கூட டெல்லியில் திராவிட கழகம் சார்பாக ஒரு மாநாடு நடைபெற்றது அதில் நானும் பங்கேற்றேன். டெல்லியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் ஏன் தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும் எதிர்கிறார்கள் என்று. நான் இங்கு ஒன்றுசொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் வகுப்பெடுத்த மாநிலம் தமிழ்நாடு. இடஒதிக்கீட்டுக்கு ஆதரவான முழக்கம், தென்னிந்தியாவின் நலஉரிமைச்சங்கம் தொடங்கி நீதிக்கட்சியின் வழியாக தந்தை பெரியார் தோற்றிவித்த திராவிட கழகத்தினால்தான் சாத்தியமானது. தமிழ்நாட்டில் பெரியார் இடஒதுக்கீட்டில் ஏற்படுத்திய தாக்கம்தான் முன்னாள் பிரதமர் சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்களின் வழியாக மங்கள் கமிஷன் வடிவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது . 

இந்தியா முழுமைக்கும் இட ஒதிக்கீடு  தமிழ்நாட்டினால்தான்  மலர்ந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமா காந்தியடிகள் தனது ஆடம்பர ஆடைகளை துறக்க எது காரணமாக இருந்தது யார் காரணமாக இருந்தார்கள். தமிழ்நாட்டிற்கு மதுரைக்கு காந்தியடிகள் இரயிலில் வந்துகொண்டிருந்த சமயத்திலே விவசாயிகள் இடுப்பிலே கோமணத்தை மட்டும் கட்டிக்கொண்டு விவசாயம் செய்துகொண்டிருந்தார். அப்போது காந்தியடிகள் ஒரு தமிழ் விவசாயி ஒரு கோமணத்தை மட்டும் கட்டிக்கொண்டும் விவசாயம் செய்கின்றார். எனக்கு இனி ஆடம்பர ஆடைகள் வேண்டாம். இடுப்பில் வேஷ்டியும் மேலே போர்த்திக்கொள்ள துண்டும் போதும் என்ற முடிவுக்கு வந்தார். அந்த முடிவுக்கு வரக்காரணம் ஒரு தமிழ் விவசாயின் தோற்றம் என்பதை மறந்துவிடக் கூடாது. காந்தியடிகளையே மனமாற்றம் செய்த பூமி இந்த தமிழ் பூமி.


அதுமட்டுமா நேதாஜிக்கும், காந்தியடிகளுக்கும் இடையே மனவருத்தம். நேதாஜிக்கும், நேருவுக்கும் பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்தியா முழுவதும் நேருவிற்கு செல்வாக்கு இருந்தது. ஆனால் அன்று சென்னை மாகாணத்தில் நடைபெற்ற  காங்கிரஸ் கூட்டத்தில்  நேதாஜிதான்  தலைமை ஏற்க  வேண்டும் என்று தமிழர்கள்  துணிச்சலாக தீர்மானம் எடுத்தனர். இந்த சம்பவத்தால் காந்தியடிகளையே தமிழர்கள் அதிரவைத்தார்கள் என்பது வரலாறு. இயக்குனர் கௌதமனுக்கு ஒரு வேண்டுகோள் தமிழ்நாட்டிற்கும்-புதுச்சேரிக்கும் நீட் தேர்வுக்கு விதிவிலக்கு வேண்டும் என்கிறீர்கள்.

தமிழன் பரந்தமனப்பான்மை உடையவன் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கொடுத்து பழகியவன். அதனால் வட இந்தியாவிலும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் அதனால் அகில இந்திய அளவில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்க வேண்டும். டெல்லியை பணிய வைக்க வேண்டும் என்றல் இந்த கோபத்தீயை இந்திய முழுவதும் பரவச்செய்ய வேண்டும். கல்வி மாநில பட்டியலில் இருந்து பறிக்கப்பட்டது மீண்டும் எப்போது மாநில பட்டியலுக்கு வருகிறதோ அன்று இந்த நீட் முழுவதுமாக ஒழிக்கப்படும் அடுத்த தலைமுறைக்கு நீட் தேர்வின் அபாயத்தை எடுத்துச்செல்லவேண்டும் அதற்கு நாம் மேலும் உழைக்க வேண்டும்.