Skip to main content

‘’தினகரன் டம்மி... எல்லாமே அனுராதாதான்..!‘’ -போட்டுத்தாக்கும் வழக்கறிஞர் சிவசங்கரி! EXCLUSIVE

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
ttv dinakaran anuradha



தனது கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரும் காஞ்சி மாவட்ட பாராளுமன்ற தொகுதிப் பொறுப்பாளருமான வழக்கறிஞர் சிவசங்கரியை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார் தினகரன். 
 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிரடிப் பேச்சாளரும் ஊடக விவாதங்களில் அழுத்தமான வாதங்களை முன்வைப்பவருமான சிவசங்கரியின் நீக்கம் அக்கட்சியில் பலத்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. 
 

அதிமுகவின் முன்னணி தலைவர்களும், திவாகரனும் தங்கள் கட்சிக்கு வருமாறு சிவசங்கரியை இழுக்கும் முயற்சியை எடுத்திருக்கும் நிலையில், சிவசங்கரியிடம் நாம் பேசினோம். 
 

நம்மிடம் மனம் திறந்துப் பேசிய அவர், ‘’ஊடக விவாதங்களில் திவாகரன் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றால் அந்த விவாதங்களில் நீங்கள் பங்கேற்கக் கூடாது என எனக்கு கட்டளையிடப்பட்டிருந்தது.


குறிப்பாக, திவாகரன் கட்சியில் இருக்கும் தேனி கர்ணன் கலந்து கொள்ளும் விவாதத்தில் கலந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தியிருந்தனர்.  இதை நான் கடைபிடித்து வந்தேன். கட்சி தலைமையும், திவாகரன் அணியினர் வந்தால் எங்களை அழைக்காதீர்கள் என எல்லா சேனல்களுக்கும் தெரிவித்துவிட்டது. 
 

ஓபிஎஸ்-தினகரன் சந்திப்பு விவகாரம் குறித்த ஒரு விவாதத்தை சன் டி.வி. நடத்தியது. அதற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். திவாகரன் கட்சியிலிருந்து யாரேனும் வருகிறார்களா? என நெறியாளர் ராஜா திருவேங்கடத்திடம் நான் கேட்டபோது, இல்லை என சொல்லிவிட்டார்.


நிகழ்ச்சி துவங்கிய நேரத்தில் தேனி கர்ணன் வருவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, நெறியாளரிடம் நான் கேள்வி எழுப்பியபோது, வருவதாக சொல்லியிருந்தவர் கடைசி நேரத்தில் வரவில்லை மேடம். அதனால்தான் இவரை அழைக்க வேண்டியதாயிற்று.


தவறாக நினைக்காதீர்கள். உங்கள் கட்சி தலைமையிடம் நாங்கள் சொல்லிக்கொள்கிறோம் என்றதாலும், நிகழ்ச்சி துவங்கிய பிறகு அதனை புறக்கணித்து வெளியேறுவது நாகரீகமாக இருக்காது என்பதாலும் அந்த விவாதத்தில் நான் பங்கேற்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.


அதேபோல, சபரிமலைக்கு பெண்கள் செல்லலாமா? கூடாதா? என்கிற விவாதத்தை மக்கள் தொலைக்காட்சி நடத்தியது.  இப்பிரச்சனையில் எந்த நிலைப்பாட்டையும் தினகரன் எடுக்காததால் கட்சி சார்பாக நான் கலந்துகொள்ளாமல் வழக்கறிஞராக கலந்துகொண்டேன்.


மேற்கண்ட இந்த இரண்டு விசயங்களையும் பெரிய குற்றமாக கருதி  தினகரனின் உதவியாளர்கள் ஜனாவும் பிரபுவும் என்னைக் குற்றவாளியாக்கிப் சகட்டுமேணிக்குப் பேசினார்கள். நான் சொல்லும் எந்த விளக்கத்தையும் அவர்கள் கேட்பதாக இல்லை. இந்த சூழலில்தான், என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சியிலிருந்து நீக்கி விட்டார் தினகரன்.


                கட்சியை தினகரன் ஆரம்பித்த போது பதவிக்காக ஒரு பைசா கூட நான் தரவில்லை. என் உழைப்பைப் பார்த்துதான் பதவிகளை எனக்கு தினகரன் தந்தார். இது பல பேருக்குப் பிடிக்கவில்லை.

குறிப்பாக, தினகரனின் மனைவி அனுராதா, உதவியாளர்கள் ஜனா, பிரபுவுக்குப் பிடிக்கவில்லை. கட்சியிலுள்ள நியமனங்களாக இருந்தாலும் நீக்கமாக இருந்தாலும் அனுராதாதான் முடிவு செய்வார்.

அவருக்குத் தெரியாமல் அவரது அறிவுறுத்தல் இல்லாமல் எதுவும் நடக்கக்கூடாது. அப்படி ஒரு சட்டம் கட்சியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு மட்டும் யாரிடமும் ஆலோசிக்காமல் தினகரனே பதவி கொடுத்துவிட்டார்.

அதனால் ஆரம்பத்திலிருந்தே என்னை அனுராதாவுக்குப் பிடிக்காமல் போனது. அனுராதாவுக்கு துணையாக ஜனாவும் பிரபுவும் இருந்தனர். பதவி கிடைத்தப் பிறகு அனுராதாவை நான் சந்திக்கவில்லைங்கிறதுதான் அவர்களுக்கு கோபம். கட்சிக்கும் அனுராதாவுக்கும் சம்மந்தமில்லைங்கிற போது அவரை ஏன் நான் பார்க்க வேண்டும்? 
 

sivasankari ammk




                 தினகரனுக்கும் தொண்டர்களுக்கும் கட்சியில் அதிக இடைவெளியிருக்கிறது. முக்கிய பதவிகளில் இருக்கும் நிர்வாகிகள் கூட எளிதாக தினகரனை சந்தித்துவிட முடியாது. காஞ்சி பாராளுமன்ற தொகுதி குறித்து பல விசயங்களை சொல்லவும், எனக்குப் பதவி கொடுத்ததற்கு வாழ்த்துப் பெறவும் தினகரனை சந்திக்க விரும்பி நான் கடிதம் கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டன.  எனக்கு அப்பாயிண்ட்மெண்டே கொடுக்கப் படவில்லை.


இது எனக்கு மட்டுமல்ல ; நிர்வாகிகள் எல்லோருக்கும் ஏற்பட்டுள்ள அவலம். முதல்வர் எடப்பாடி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்கள் எல்லாம் எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும் தொண்டர்களைச் சந்திப்பதை தவிர்த்ததில்லை.

தினகரனிடம் அப்படி அல்ல. அவரை யார் சந்திக்க வேண்டுமென்பதை அனுராதாதான் முடிவு செய்கிறார். தினகரன் அங்கு டம்மி. முதல் வலை ஜனா, இரண்டாவது வலை பிரபு, மூன்றாவது வலை அனுராதா. இந்த மூன்று வலைகளையும் தாண்டித்தான் தினகரனை சந்திக்க முடியும்.


தினகரன் தன்னிச்சையாக யாரையாவது முக்கியப் பதவிகளில் நியமித்துவிட்டால், அவர்களை இந்த மூவரும் செயல்படவே விடமாட்டார்கள். 
 

ஒரு தலைவர் என்பவர் தொண்டர்கள் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும். அதேபோல, ஓட்டு அரசியல் செய்யக்கூடாது. கொள்கை அரசியல் செய்ய வேண்டும். அதற்கு தினகரன் தகுதி இல்லாதவர்.


ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே சுருங்கிக்கிடக்கிறார். கட்சி வேறு ; குடும்பம் வேறு என அவர் பிரித்துப் பார்க்காமல் ஒன்றாகப் பார்க்கிறார் தினகரன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 99 சதவீத தொண்டர்கள் இதனை ஏற்க மறுத்து உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.


மூவர் அணியின் டார்ச்சரால் தினகரனை விட்டு வெளியேற பலரும் சூழல்களுக்காக காத்திருக்கிறார்கள். கட்சியின் மகளிர் அணியினர் வட்டிக்கு பணம் வாங்கி கட்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை பரிதாபமாக இருக்கிறது.


பெஃரா வழக்கில் தினகரனை எதிர்த்து நாடே பேசிய போதும், அரசியல் நெருக்கடி அவருக்கு ஏற்பட்ட போதும் கட்சி தொண்டர்கள்தான் அவருக்காக ஊடகங்களிலும் பொது வெளியிலும் தொண்டை வறண்டுப் போகுமளவுக்கு குரல் கொடுத்தனர். அந்த தொண்டர்களைப் பாதுகாக்க தினகரன் தயாரில்லை ! ’’ என்று குற்றம்சாட்டுகிறார் சிவசங்கரி.